செவ்வாய், 16 ஜூன், 2009

2009-06-16

புதுவை அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுவை அருகே உள்ள பட்டானூர் வசந்தபுரம் மூன்றாவது குறுக்கு தெருவினைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சித்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்றிரவில் வெங்கடேசன் தனது மனைவி சித்ராவை புதுவையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விட்டு வீடு திரும்பினார்.
இதன்பின்னர் அவர் தனது மனைவியை தெரு முனையில் இறக்கிவிட்டு விட்டு மது குடிக்க சென்றுள்ளார். இதன்பின்னர் வீடு திரும்பிய வெங்கடேசன், வீட்டில் தனது மனைவி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கதறினார். இதனைகேட்ட அக்கம்பக்கத்தினர், சித்ராவின் பெற்றோர் மற்றும் கோட்டக்குப்பம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை தீவிர விசாரணை மேற்கொண்ட கோட்டக்குப்பம் டிஎஸ்பி கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர் சபியுல்லா ஆகியோர், இளம்பெண் கொலைக்கு அவரது கணவர் வெங்கடேசன்தான் என்பதை உறுதிப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடியது தெரியவந்தது.
சித்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட வெங்கடேசனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. இதனை அவரது மனைவி தட்டிக்கேட்டபோது அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி உயிருடன் இருந்தால் உல்லாசமாக இருக்க முடியாது என்பதை உணர்ந்த வெங்கடேன், நேற்று மாலை தனது மனைவியை பீச், பார்க் என சுற்றிக்காட்டி உள்ளார்.
இதன்பின்னர் அவர் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று உணவு வாங்கி கொடுத்து விட்டு தெருமுனையில் இறக்கி விட்டுள்ளார். மனைவி சித்ரா வீடு போய் சேருவதற்கு முன்பாகவே பின்புற பகுதியாக சென்ற வெங்கடேசன் ஏற்கனவே தயாராக வைத்திருந்த இருப்பு பைப்பினால் தாக்கி உள்ளார். இதன்பின்னர் அவர், தனது மனைவியின் தாலி செயினை திருடர்கள் பறித்துச் சென்றது போன்று ஒன்றுமே தெரியாமல் இன்று காலை வரை நாடகமாடி உள்ளார்.
கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் சபியுல்லாவின் கிடுக்கிப்பிடியில் சிக்கிய வெங்கடேசன், நேற்று இரவில் அரங்கேற்றி கொலை வெறி நாடகத்தை வாக்குமூலமாக அளித்ததை தொடர்ந்து உண்மைகள் அம்பலமாகியது. காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை மாதுக்களின் உல்லாச வாழ்விற்காக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுவை அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு வந்த நிறைமாத கர்ப்பிணியை அனுமதிக்க மறுத்துவிட்டதால் அவருக்கு பாரதி பூங்காவில் குழந்தை பிறந்த சம்பவம் இன்று பிற்பகல் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுவை அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு முத்தியால்பேட்டையைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி பிரபாவதி இன்று காலை வந்தபோது அவரிடம் எந்த நாளில் குழந்தை பிறக்கும் என்பதற்கான மருத்துவ அட்டையை கேட்டுள்ளனர். ஆனால் அவர் எடுத்து வராததால் மருத்துவமனைக்கு அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
இதனை தொடர்ந்து கர்ப்பிணி பெண்ணான அவர், தனது தாயுடன் பாரதி பூங்காவில் காத்திருந்தபோது பிரசவ வலி ஏற்பட்டது. இதனை கண்ட பெண்கள் செய்த உதவியினால் பிரபாவதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து தகவலறிந்த செவிலியர்கள் உடனடியாக பாரதி பூங்காவிற்கு விரைந்து சென்று குழந்தையையும், அதன் தாயையும் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் காரணமாக புதுவை பாரதி பூங்காவில் இன்று பிற்பகல் இருந்தவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை அருகே உள்ள கிராமப்புற பகுதியில் சொட்டு நீர் பாசனம் மூலம் கரும்பு பயிரிடுவதில் வேளாண் அறிவியல் நிலையம் அக்கறை கொண்டிருப்பது விவசாயிகளை உற்சாகமடையச் செய்துள்ளது.
புதுவை அருகே உள்ள கிராமப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்புதான் பயிரிடப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கரும்புக்கு கூடுதல் விலையின்மை, ஆட்கள் பற்றாக்குறை, போதுமான நிலம் இல்லாமை போன்றவை காரணமாக கரும்பு பயிரிடுவது என்பது நாளுக்குநாள் குறைந்து வருகிறது.
இந்நிலையை போக்கிடும் வகையில் புதுவை வேளாண்துறை மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் ஆகியவை இணைந்து சொட்டு நீர் பாசனம் மூலம் கரும்பு பயிரிடுவதில் புதிய சாகுபடி முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதனால் நல்ல மகசூல் கிடைப்பதுடன் கரும்பினை பயிரிடும் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாயும் கிடைக்கும் என்று வேளாண் அறிவியல் நிலையத்தினர் உறுதி தெரிவித்துள்ளனர்.
இயந்திர நடவிலிருந்து அறுவடை வரை அனைத்தும் இயந்திர முறை என்பதால் ஆட்கள் பற்றாக்குறையை தவிர்ப்பதுடன், குறிப்பிட்ட காலத்தில் நிறைவான மகசூலை பெற முடியுமென்று விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டி வருகின்றனர். இதன் பயனாக புதுவை அருகே உள்ள கரியமாணிக்கத்தில் சொட்டு நீர் பாசன முறை மூலம் கரும்பு பயிரிடுவது அதிகரித்து வருகிறது.
புதுவை நகரப்பகுதியில் இயங்கும் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதென்று அமைச்சர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
புதுவை யூனியன் பிரதேசத்தில் ஆறாவது ஊதியக்கமிஷன் பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக வீட்டு வாடகைப்படியை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்த பல்வேறு கூட்டுறவு சங்கங்களின் ஊழியர் அமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்த கோரிக்கையை ஆராய கூட்டுறவு துறையால் ஏற்படுத்தப்பட்ட குழு புதுவை நகரப்பகுதியில் இயங்கும் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படியை 20 சதவீதமாக உயர்த்த பரிந்துரை செய்தமைக்கு முதல்வர் வைத்திலிங்கம் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்மூலம் புதுவை நகரப்பகுதியில் இயங்கும் கூட்டுறவு சங்கங்கள் தங்களின் ஊழியர்களுக்கு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் வீட்டு வாடகைப்படியை 20 சதவீதத்திற்கு உயர்த்த அனுமதிக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் கூடுதல் செலவினத்தை அந்தந்த சங்கங்களே ஏற்கும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
புதுவையில் காவல் துறை, சுகாதாரத்துறை மற்றும் பல்வேறு துறைகளுக்கான பட்ஜெட்டுக்கு முந்தைய கலந்தாய்வு கூட்டம் முதல்வர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
புதுவை காவல் துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, சட்டத்துறை, துறைமுகம், சிறைச்சாலை, தொழில் மற்றும் வணிகம், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல், கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு, முன்னாள் படைவீரர்கள் நலன் போன்ற துறைகளுக்கான பட்ஜெட்டுக்கு முந்தைய கலந்தாய்வு கூட்டம் தலைமைச் செயலக கருத்தரங்கு கூடத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதற்கு முதல்வர் வைத்திலிங்கம் தலைமை தாங்க, உள்துறை அமைச்சர் வல்சராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் டிஜிபி ஏ.கே. வர்மா, சீனியர் எஸ்பிக்கள் ஸ்ரீகாந்த், சிந்துப்பிள்ளை, சுகாதாரத்துறை இயக்குனர் திலிப்குமார் பாலிகா மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்கள், இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டின்போது ஒதுக்கப்பட வேண்டிய நிதி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு அமைச்சர்களின் துறைகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு குறித்து கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட உள்ளதால் அதற்கான தயாரிப்பு பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அகினா புரொடக்ஷன்ஸ் தயாக்கும் படம் ராகவன். செல்வராகவனிடம் உதவியாளராக இருந்த பரந்தாமன், இந்த படத்தை இயக்குகிறார்.  இப்படத்தில் ஷீரடி சாய்பாபா சிலையை கதாநாயகி கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதுபோல படமாக்கப்பட்டது. இந்த காட்சியை சென்சார் போர்டு வெட்டியதோடு இதுபோன்ற காட்சிகளை படமாக்க கண்டனம் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை: