செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07

நட்சத்திர வாரத்தில் புதுவையை பற்றி எழுதாவிட்டால் எப்படி? ஆனால் என்னவென்று எழுதுவது. எதை எழுதினாலும் அதோடு கலந்திருக்கும் என் பால்யமும் என் பதின்மங்களும் என்னை அதனோடு இழுத்துக்கொண்டு பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்துவிடும். நான் நினைவுகளில் தொலைந்து போகக்கூடும்.


புதுவை என்றாலே பலருக்கு பல விசயங்கள் நினைவுக்கு வரும். அதன் கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலை, பியர், அன்னை.. இன்னும் பல


அவற்றை தவிர இன்னொன்றும் மிக பிரபலமாக ஒரு காலத்தில் இருந்தது; திரையரங்குகள். புதுவையின் நகரப்பகுதி மிகவும் சிறியது. (இப்போதைய புதுவையின் எல்லை மிகவும் விரியவடைந்து விட்டது. முழுக்கவே நகரமயமாகிவிட்டது). நகர பகுதியை சுற்றியிருக்கும் நான்கு பிரதான சாலைகளையும் (Boulevard) நீங்கள் நடந்தே கூட சுற்றிவரலாம். 'எல்லா சாலைகளும் ரோமில் தான் முடியும்' என்று ஒரு ஆங்கில பழமொழியுண்டு. புதுவையின் நகரப்பகுதியின் எல்லா சாலைகளுமே கடற்கரையில் தான் முடியும்.


அந்த நான்கு பிரதான சாலைகளிலும் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலும் ஏகப்பட்ட திரையரங்குகள் உண்டு (அப்போது!). அனேகமாய் அனைத்திலும் கூட்டம் இருக்கவே செய்யும். எப்படி புதுவையில் குடிப்பவர்களில் முக்கால்வாசி பேர் வேற்று நகரவாசிகளோ, அப்படியே திரையரங்களிலும் நிறைய வெளியூர்காரர்களை காணலாம். சொந்த பந்தம் எல்லாம் புதுவை வருகையில் கட்டாயம் ஒரு திரைப்படத்தையாவது பார்த்து விட்டுத்தான் செல்வர். ஒரு திரையரங்கில் நெரிசலெனில் நடந்தே அடுத்த திரையரங்கித்திற்கு சென்றுவிடலாம். ஆனால் காலம் தீட்டும் ஓவியத்தில் வண்ணங்களும் உருவங்களும் மாறிக்கொண்டே தானிருக்கும். இப்போது புதுவையில் உருப்படியான திரையரங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். பல திரையரங்குகள் திருமண மண்டபங்களாகவும், உல்லாச விடுதிகளாகவும் மாறிவிட்டன.


குறிப்பாக 'ஆனந்தா' திரையரங்கு இடிக்கப்பட்ட போது என்னவோ போல் இருந்தது. இளநிலை படிக்கையில் அங்கு எத்தனையோ திரைப்படங்களை பார்த்திருக்கிறோம். ஒவ்வொன்றும் ஒரு அனுபவம். திரைப்படங்கள் மேல் பெரிதாக மோகம் ஒன்றுமில்லை. ஆனால் எங்கள் உச்சக்கட்ட பொழுதுபோக்கே அது தான். அப்போதைக்கு எங்களுக்கு அவ்வளவு தான் Exposure இருந்தது :-)


சில நாட்களுக்கு முன் நண்பன் ஒருவனிடம் பேசிக்கொண்டிருந்தேன். இப்போது ஜப்பானில் இருக்கிறான். பொழுது போக என்னடா செய்யுறன்னு கேட்டதற்கு, "இணையத்தில் தான் தேடித்தேடி படமா பாத்துக்கிட்டு இருக்கேன்"ன்னு சொன்னான். ஏண்டா? அங்கயெல்லாம் திரையரங்கு இல்லையான்னு கேட்டதுக்கு "நீ வேற, பத்து ரூபாய்க்கு படம் காட்ட மாட்டாங்களாம்டா, நாமெல்லாம் பத்து ரூபாய்க்கு படமும் பாத்துட்டு பார்க்கார்னும் சாப்டவுங்களாச்சே! இதெல்லாம் வேலைக்கு ஆகாதுடா" அப்படீங்கிறான். அடப்பாவீகளா, உங்க நக்கலு மாறவே மாறாதாடா?
ஒவ்வொரு நாளும் ஏதோவொரு இடத்தில் யாரேனும் ஒருவர் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகிக்கொண்டே தானிருக்கிறார்கள். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது வெறும் சொற்களில் மட்டுமே இருக்கிறது. எத்தனை தூரம் நாகரீகம் வளர்ந்திருந்தாலும் இன்னும் சகமனிதனை ஒரு உயிராய் கூட மதிக்க தெரியாதவர்கள் நிறைந்த உலகத்தில்,வாழ்வது கூட ஒரு பெரும் சாதனையாகத்தான் ஆகிவிடக்கூடும். சொல்வதற்கு புதிதாக ஏதுமில்லை, அல்லது அதற்கு மனம் ஒப்பவில்லை. அடுத்த தலைமுறைக்காவது மனித்தை கற்றுத்தர வேண்டிய கடமை நமக்கு பெரிதாக இருக்கிறது என்று ஒன்றை மட்டும் என்னால் சர்வ நிச்சயமாக சொல்ல முடியும். இப்போதைக்கு இனவெறி தாக்குதல்களுக்கு ஆளாகும் ஒவ்வொருக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்.



மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே!
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே!

வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே

காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும்!

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

துளியெல்லாம் கைகோர்த்து கடலாகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
துகளலெல்லாம் ஒன்றாகி மலையாகட்டும்
விண்ணோடு விண் சேரட்டும்

விடியாத இரவென்றும் வானில் இல்லை
ஒலியோடு ஒலி சேரட்டும்


More than a Blog Aggregator

by ச.பிரேம்குமார்


நெடும்பயணதிற்கு
ஆயத்தமான பொழுதொன்றில்
கடந்துவந்த பூமரத்தினடியில்
சில புன்னகைகளை விட்டுவந்தேன்

நான்
கடக்கவேண்டிய வழியெங்கிலும்
வேர்கள் பரப்பி
காத்துக்கொண்டிருக்கிறது
அதன் நிழல்


- ச.பிரேம்குமார்

இந்த கவிதை 05-07-2009 தேதியிட்ட கல்கியில் வெளிவந்திருக்கிறது. இதற்காக பெரிதும் உதவிய தோழிக்கு மனமார்ந்த நன்றி

***என் பிரியமான நண்பர்களுக்கு இக்கவிதை சமர்ப்பணம்***


காலச்சக்கரங்களை கட்டிக்கொண்டு
ஒருவழிப்பாதையில் விரைகிறது வாழ்க்கை

திசைமரமோ வழிகாட்டியோ
இல்லாத கணங்கள் பயம்நிறைந்ததாய் இருக்கின்றன
வேறு சாத்தியக்கூறுகளற்று பாதையின் போக்கிலேயே
போவதை துணிவென்று அறிவிக்கிறேன்

வனப்புமிகுந்த சோலைகளை தாண்டித்தான்
செல்கிறேன்ற போதிலும்
எதற்காகவும் நிற்பதாயில்லை
மீண்டும் அவற்றை கடக்க நேரிடுமென்றும்
நிதானிக்க நேரமில்லையென்றும்
சொல்லிக்கொள்ளலாம்

நினைவிலிருத்திக் கொள்ளமுடிந்தவைகளை
பயணத்தின் முடிவில் கட்டாயம்
குறித்து வைப்பதாய் முடிவு

இக்கணம் வரை
சேரப்போகும் முகவரி இதென்பதை மட்டுந்தான்
சர்வநிச்சயமாய் சொல்ல முடியவில்லை

விழித்தெழுந்த காலையில்
அவளுடலைத் தின்னும்
வேட்கை யுதித்தது.
முழு உடலை இரண்டாய் மடித்து
லேசாய் உப்பு மிளகு தூவி,
கடித்துத் தின்று கொண்டிருந்தேன்.
உச்சியின் தகிப்பில்
சதைகளை கடித்து இழுத்து
உதடுகளில் இரத்தம் வழிய
அவளுடலைப் புசித்தேன்.
மாலைத் திரும்புகையில்
அதே உடலை நீள வாக்கில்
இரண்டாய் கீறி
பிளவுகளின் உள் நுழைந்து
பத்திரமாய் அமர்ந்து கொண்டேன்.
.....
இரவை நினைத்தால்தான்
பயமாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை: