சனி, 4 ஜூலை, 2009

2009-07-04

திருச்சி குழாயில் வந்த ‘குடி’நீர்! 

திருச்சி அடுத்த ராம்ஜி நகரில் குடிநீர் குழாயில் சாராயம் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திருச்சி திண்டுக்கல் சாலையிலுள்ள ராம்ஜி நகர் மில் காலனியில் 200 வீடுகள் உள்ளன. இங்கு குடியிருப்போருக்கு ராம்ஜி நகரில் அமைக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் நீர்த் தேக்க தொட்டி மூலம் காலை 7 மணியிலிருந்து 8.30 மணி வரை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

வழக்கம் போல் நேற்று காலை குடிநீர் பிடிப்பதற்காக அப்பகுதியிலுள்ள பெண்களும், ஆண்களும் குடங்களுடன் குழாயடிக்கு சென்றனர். அப்போது குடிநீர் குழாயிலிருந்து குடிநீருக்கு பதிலாக இரைச்சல் சப்தத்துடன் கறுப்பு கலரில் குடிநீர் வந்தது. தெருவிலுள்ள சாக்கடை குடிநீரில் கலந்து கறுப்பு கலரில் வருவதாக அப்பகுதியினர் நினைத்து குடிநீர் பிடிக்க தயங்கி நின்றனர். ஒரு சில ஆண்கள் துணிச்சலுடன் குடிநீரை கையில் பிடித்து முகர்ந்து பார்த்தனர். அப்போது சாராய வாசனை ‘குப்’ என்று அடித்தது. அதிர்ந்து போன அப்பகுதியினர் அருகிலுள்ள தெருக்களுக்கும் சென்று அங்கு வினியோகிக்கப்பட்ட தண்ணீரையும் சோதித்து பார்த்தனர். அப்போது மூன்று தெருக்களிலுள்ள பொது குடிநீர் குழாயிலும், ஒரு சில வீடுகளிலுள்ள குடிநீர் இணைப்புகளிலும் சாராய நெடியுடன் குடிநீர் வந்தது தெரியவந்தது.

இந்த விவகாரம் திருச்சி மாநகராட்சி செயற்பொறியாளர் சந்திரன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

உடனடியாக மேயர் சுஜாதா தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பாட்டிலில் பிடிக்கப்பட்ட தண்ணீரை மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் முகர்ந்து பார்த்து சாராய நெடி அடிப்பதை உணர்ந்தவுடன் அதிர்ச்சியடைந்தனர். ராம்ஜி நகரில் சிலர் தொடர்ந்து சாராயம் காய்ச்சி வருகின்றனர். இதற்காக ராம்ஜி நகரில் பல்வேறு பகுதிகளில் சாராய ஊறல் போடப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே குடிநீர் குழாய்களும் செல்கின்றன. சாராய ஊறல் தொட்டி உடைந்து குடிநீருடன் சாராயமும் கலந்து வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஓரினச் சேர்க்கை தீர்ப்பு: நடிகை குஷ்பு வரவேற்பு

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம் அல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பை நடிகை குஷ்பு வரவேற்று உள்ளார். இகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

”ஓரினச் சேர்க்கை குற்றச் செயல் அல்ல என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிறப்பான ஒரு தீர்ப்பை வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பை நான் மனதார வரவேற்கிறேன். இதன் மூலம் மக்கள் தங்கள் விருப்பப்படி வாழும் உரிமை கிடைத்துள்ளது.

இந்த தீர்ப்பு நம்நாட்டில் உள்ள சகிப்புத்தன்மை மற்றும் ஏற்றுக்கொள்ளும் தன்மையை மேலும் உயர்த்திக்காட்டுவதாக அமைந்துள்ளது.

சென்னை மக்களும் ஓரினச் சேர்க்கை பற்றி நீதிபதி அளித்துள்ள தீர்ப்பை ஏற்றுக் கொள்வார்கள் என்றே நம்புகிறேன். பெரும்பாலும் நம் நாட்டு மக்கள் அவ்வளவு எளிதில் மாறுதலை விரும்பமாட்டார்கள். ஆனாலும் நம் நாட்டில் அவ்வப்போது சில மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு மேல் நான் எதையும் சொல்ல விரும்பவில்லை” என்றார்.

 தமிழர் வகைதுறைவள நிலைய ஏற்பாட்டில் அன்பென்று கொட்டு முரசே! தோழர் சிவம் நினைவு நிகழ்வும் பேருரையும்! சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராய் போராளியாய் எழுந்து தன் வாழ்நாள் முழுவதும் மானிடத்தின் முன்னேற்றத்திற்காய் உழைத்த தோழர் கணேசமூர்த்தி சிவகுமாரன் (நெல்லியடி சிவம்) அவர்களின் நினைவாய் நிகழ்வும் பேருரையும். நினைவுப் பேருரை ஆற்றுகை: பேராசிரியர் சிவசேகரம் (பொறியியல் பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை)   காலம்: இன்று  யூலை 4, 2009 மாலை 4.30 மணி   இடம்: Everest Banquet & Convention Hall முகவரி:  1199 Kennedy Road (@ Lawrence [...]

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுமா?; சட்டசபையில் அமைச்சர் பதில்

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது மத்திய மனித வள மேம்பாட்டு மந்திரி கபில்சிபல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது பற்றி ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிலும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுமா என்று ஞானசேகரன் (காங்):- கேட்டார்.

அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-

”மத்திய மந்திரி கபில்சிபல் தெரிவித்துள்ள கருத்து பற்றி தேசிய அளவில் விவாதம் நடந்து வருகிறது. தமிழ் நாட்டிலும் இதற்கு ஆதரவும் இருக்கிறது. எதிர்ப்பும் இருக்கிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே 6-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. 10-ம்வகுப்பு பொதுத் தேர்வு என்பது மேல் நிலைப்படிப்புகளை தொடர முக்கியமான படிக்கல் போன்றது. பாலி டெக்னிக், ஐ.டி.ஐ., 12-ம் வகுப்பு படிப்பை தொடர இது தேவைப்படுகிறது.

மத்திய மந்திரி சொல்லி இருப்பது ஒரு கருத்துதான். மாநில அரசுகளுடன் கலந்து பேசி பின்னர் முடிவெடுக்கலாம் என்றுதான் அவர் கூறி இருக்கிறார். மத்திய அரசு மாநில அரசிடம் இதுவரை கருத்து ஏதும் கேட்கவில்லை. அப்படி கருத்துகேட்டால் தமிழ்நாட்டில் கல்வியாளர்கள், வல்லுனர்கள், ஆசிரியர்கள் போன்ற அனைவருடைய கருத்துக்களையும் கேட்டு முதல் வரையும் கலந்து ஆலோசித்து அதன் பிறகு மத்திய அரசுக்கு கருத்து தெரிவிக்கப்படும்”

இவ்வாறு அவர் கூறினார்.

நாடோடிகள் - திரைவிமர்சனம்

சசிகுமார், விஜய், பரணி மூவரும் நண்பர்கள். இளைஞர்களுக்கே உரிய சந்தோஷச் சமாசாரங்களும் திரிகிறார்கள். சசிகுமார்
உறவுப் பெண்ணான அனன்யாவை காதலிக்கிறார். மகளை கட்டிக்க அரசு வேலையுடன் வர மாமனார் நிர்ப்பந்திக்கிறார். இதற்காக தேர்வுகள் எழுதுகிறார். விஜய் சசிகுமார் தங்கையை காதலிக்கிறார்.

சசிக்குமாரின் பழைய நண்பர் ரங்கா இவர்கள் வாழ்க்கையில் வந்து சேர திருப்பம். கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயலும் இவரை காப்பாற்றி காரணம் கேட்கின்றனர். காதல் தோல்வி என்கிறார்.

நாமக்கல் தொழில் அதிபர் மகளான காதலியை ரங்காவுடன் சேர்த்து வைக்க நண்பர்கள் கிளம்புகின்றனர். காதலியைக் கடத்தி ரங்காவுடன் சென்னைக்கு அனுப்பி வைக்கின்றனர். சண்டையில் விஜய் ஒரு காலை இழக்கிறார். பரணி காது செவிடாகிறது. சசிகுமார் காதலியை இழக்கிறார்.

மூவரும் ஜெயிலில் இருந்து திரும்புகின்றனர். நண்பன் காதலை நினைத்து தங்கள் இழப்புகளை மறக்கின்றனர். மீண்டும் பழைய வாழ்வை துவங்கும்போது காதல் ஜோடி ஒருத்தருக்கொருத்தர் சண்டை போட்டு பிரிந்து அவரவர் வீட்டுக்கு போய் விட்டார்கள் என்ற செய்தி இடியாக வந்து தாக்குகிறது.

தங்கள் உழைப்பு, தியாகம் அத்தனையும் மதிப்பிழந்து போனது கண்டு துடிக்கின்றனர். இருவரையும் கடத்தி கொன்று விடலாம் என பரணி ஆவேசமாக கத்துகிறார். மீண்டும் ஒரு கடத்தலுக்கு தயாராவது பரபரப்பான கிளைமாக்ஸ்.

முறைப்பெண்ணை மணக்க வேலை தேடும் சசிகுமார் யதார்த்த நடிப்பில் பளிச்சிடுகிறார்.

தந்தை யோசனைபடி காதலிக்கும் விஜய் கலகலப்பூட்டுகிறார். காருக்கு அடியில் சிக்கி காலை இழந்து துடிக்கையில் அனுதாபப்பட வைக்கிறார். கஞ்சா கருப்பும், பரணியும் காமெடியில் பட்டையை கிளப்புகின்றனர். முகத்தை கோணி, சிரித்து துறுதுறுவென வரும் அனன்யா அனைவர் மனதில் ஒட்டிக் கொள்கிறார். அபிநயாவும் ஓகே.

நண்பர்களின் கலாட்டாவுடன் தொடங்கும் கதை காதலுக்கு உதவ நாமக்கல் சென்றதும் பறக்கிறது.

வித்தியாசமான கதை, விறுவிறுப்பான திரைக்கதை என புதுப்படையல் இட்டு, முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடிக்கிறார் சமுத்திரக்கனி.

இசையில் சுந்தர்.சி. பாபுவும், ஒளிப்பதிவில் எஸ்.ஆர்.கதிரும் தங்கள் திறமையைக் காட்டி அசத்தியிருக்கிறார்கள்.


பேசாதவைக்கு எல்லாம்
பிள்ளைகளோடு பேசுவதுதான் பேறு.
கைப்பிடித்து அழைத்து வந்து
மூன்றாம் வகுப்பு 'பி' பிரிவு கனகாவின்
கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டு
நாலு வரி நோட்டுச் சொன்னது:

'வா... செல்ல மகளே
எழுத்தோடு
நாலு சக்கர நடைவண்டியால் பழகுவோம்
சீவின இந்தப் பென்சிலை
கைப்பிடியாகப் பிடித்துக்கொள்
மெல்ல துவங்கி வா
அப்படித்தான்...அப்படித்தான்
முதல் சக்கரத்தையும் நான்காம் சக்கரத்தையும்
நன்றாகக் கவனி
பாதையைத் தாண்டிப் போகவிடாதே
நேராக...நேராக...நேராக வா...
அவ்வளவுதான் மகளே.'

ஃபைவ் ஸ்டார் சுவைத்துக்கொண்டிருந்த
நான்காம் வகுப்பு 'டி' பிரிவு கேசவனின்
முதுகைத் தடவிக் கொடுத்தபடியே
இரட்டை வரி நோட்டுச் சொன்னது:

'சாக்லெட் சுவைத்துவிட்டாயா...கண்ணே
ஊதுகுழல் பிணைத்த பென்சிலாலான
உன்னுடைய காலணியை அணிந்து கொள்
எழுத்துக்குப் புவி ஈர்ப்புவிசையைக் கொடுப்பதற்காக
காத்திருக்கும் சிறு இடைவெளி விட்ட
என் இரு கோடுகளைப் பார்
நேராய் நில்
நிற்கிற நேரிலேயே
மென்மையூடே அவற்றிற்கிடையில் அழுத்திப் பதித்து வா...
ஊதுகுழல் மனனம் செய்து பாடத் தொடங்கிவிட்டன
நீயும் சத்தமாய் எழுத்தைப் போற்றி வா
கொஞ்சம் வேகமாய்....போதும்...போதும்...
அழகு கண்ணே... நேர் கொண்ட அழகு கண்ணே...'

புழுதி காலை கழுவி வர வைத்து
பயத்தோடு உட்கார்ந்திருந்த
ஆறாம் வகுப்பு 'ஏ' பிரிவு கோகிலாவிடம்
கோடில்லாத நோட்டுச் சொன்னது:

'பாதுகாப்புக்கு
ஒரு கோடும் இல்லாததற்காகத் திகைக்காதே
வளர்ந்த பிள்ளையே...
மேலூரிலிருந்து கீழூருக்கும்
கீழூரிலிருந்து மையவூருக்கும்
நெளிந்து போகுமென்பதற்காகப் பதறாதே
கண்ணாடி ஸ்கேலாக உன் பார்வையை வை
வலக் கண்ணால் மேல் கோடு வரை
இடக் கண்ணால் கீழ் கோடு வரை
கோணலில்லாத மனதை
எழுதுகோலுக்கு மையாயூட்டி
எழுத்தை எழுப்பி அழைத்து வா...
வரிவரியாய் வந்துகொண்டே இரு
மண்ணை உழுதெழும்
மண்புழுக்கள் போல.'
நன்றி: வார்த்தை

கருத்துகள் இல்லை: