புதுவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகள் அரசு ஒதுக்கீடாக 50 சதவீதம் வழங்குவது தொடர்பாக நிர்வாகத்தினருடன் அரசு அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
புதுவையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 50 சதவீதம் வழங்க வேண்டுமென்று, தடையில்லா சான்றிதழ் கொடுக்கும்போதே ஆணை வழங்கப்பட்ட போதிலும், அரசுக்குரிய 50 சதவீத இடஒதுக்கீடு இன்று வரை முறையாக வழங்கப்பட்டதில்லை.
ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கைக்கு முன்னதாக மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினருடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் அரசு நிர்ணயித்துள்ள 50 சதவீதம் என்பது இதுவரை கனவாகவே உள்ளது. இப்பிரச்னை தொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் வலியுறுத்திய போதிலும், இதனை தனியார் மருத்துவக்கல்லூரிகள் கண்டு கொள்வதில்லை.
இதுபோன்ற சூழ்நிலையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையின்போது 50 சதவீத இடஒதுக்கீட்டினை வழங்க வேண்டுமென்று அரசு தரப்பில் கடந்த சில தினங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வனத்துறை கருத்தரங்கு கூடத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதில், முதல்வர் வைத்திலிங்கம், அமைச்சர் வல்சராஜ், சுகாதாரத்துறை செயலர், இயக்குனர் மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.
அப்போது அரசுக்குரிய 50 சதவீத இடஒதுக்கீட்டினை வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஆனால் வழக்கம்போல் இன்றைய பேச்சுவார்த்தையிலும் இழுபறியே நீடித்தது தெரியவந்துள்ளது.
ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி சென்டாக் பணிகளை புறக்கணிக்க பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் முடிவெடுத்திருப்பதால் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
புதுவையில் ஒருங்கிணைந்த பொறியியல், மருத்துவம் சேர்க்கைக்காக சென்டாக் குழு பொறியியல் கல்லூரியில் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவினர் ஓரிரு மாதங்களாக இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்டாக் மூலம்தான் அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களில் சேர முடியுமென்பதால் இதற்கான எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடையே அதிகமாக உள்ளது.
இந்நிலையில் ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை தங்களுக்கும் அமல்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுவை பொறியியல் கல்லூரி ஆசிரியர் சங்கத்தினர் அதன் தலைவர் நரசிம்மா தலைமையில் இன்று முதல் சென்டாக் பணிகளை புறக்கணித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி புதுவை பல்கலைக்கழக விடைத்தாள் திருத்தும் பணிகளையும் நிறுத்தி வைக்க உள்ளனர். இதனால் சென்டாக் தேர்விற்காக காத்திருக்கும் மாணவ, மாணவியர் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது
புதுவை மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படுவதுடன், அவர்களின் நலன் காக்க காங்கிரஸ் அரசு பாடுபடுமென்று முதல்வர் வைத்திலிங்கம் உறுதி அளித்துள்ளார்.
புதுவை யூனியன் பிரதேசத்தை சேர்ந்த விவசாய தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்கும் பொருட்டு வேளாண் துறை மூலமாக விவசாய தொழிலாளர் நலச்சங்கம் அமைக்கப்பட்டது. இதன்பயனாக புதுவை பிரதேசத்தில் 29 ஆயிரத்து 55 விவசாயிகள் பயன்பெற உள்ளனர். முதற்கட்டமாக கரியமாணிக்கம் கரும்பு உழவியல் பண்ணையில் விவசாய கூலி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் விவசாய தொழிலாளர் நலச்சங்க தலைமை செயல் அலுவலர் பால பாஸ்கரன் வரவேற்புரையாற்ற, நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து தலைவர் ராஜவதனி, வேளாண் செயலர் சாஹு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு அடையாள அட்டையினை வழங்கி பேசிய முதல்வர் வைத்திலிங்கம், விவசாயத்தை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தில்தான் அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறதென்றும், மழைக்காலங்களில் அவர்களுக்கு மழைக்கோட்டும், கொசு வலையும் வழங்கப்படுமென்றார்.
விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படுவதுடன், அவர்களின் நலன் காக்க காங்கிரஸ் அரசு பாடுபடுமென்று முதல்வர் வைத்திலிங்கம் உறுதி அளித்தார்.
புதுவை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து இரண்டு மாணவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக முதலியார்பேட்டை ஆட்டோ டிரைவர் முத்து உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுவை அருகே உள்ள தவளக்குப்பம் கொருக்குமேடு பகுதியைச் சேர்ந்த லாசர் மகன் ஆல்பர்ட் மற்றும் எத்திராஜ் என்பவரின் மகன் அந்தோணிராஜ் ஆகியோர் ஆண்டியார்பாளையத்தில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வந்தனர்.
நேற்றுமுன்தினம் காலை பள்ளி விடுமுறை என்பதால் இருவரும் அப்பகுதியில் உள்ள காட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது முள்புதரில் கிடந்த துணிப்பையை கண்டெடுத்த இருவரும் அதனை தவளக்குப்பம் பகுதியில் உள்ள சகாயமேரி என்பவரின் வீட்டின் முன்பாக போட்டி போட்டுக் கொண்டு வெளியில் எடுக்க முயன்றனர்.
அந்நேரத்தில் துணிப்பையில் இருந்த நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் ஆல்பர்ட், அந்தோணிராஜ் இருவரும் பலத்த காயங்களுடன் புதுவை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இரு மாணவர்களும் நேற்றுமுன்தினம் மாலை பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த சீனியர் எஸ்.பி ஸ்ரீகாந்த், எஸ்.பி தெய்வசிகாமணி, இன்ஸ்பெக்டர் அங்கப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஆட்டோ டிரைவர் முத்து மற்றும் குண்டு தயாரிக்க உதவிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முதலியார்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்து கொருக்குமேட்டில் உள்ள பாட்டி வீட்டின் பின்புறமுள்ள தோப்பில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருந்ததும், அவருக்கு முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவுடிகளுக்கும் தொடர்பிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக