வெள்ளி, 24 ஏப்ரல், 2009

2009-04-17

இலங்கையை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் கண்கானிப்பில் கொண்டு வர வேண்டும் என்று மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

போர் நடக்கும் பகுதிகளில் தமிழ் மக்களின் நிலை மிகுந்த இழிநிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவை இது விசயத்தில் அவசரமாக ஈடுபட வேண்டும் என்று மனித உரிமைகளுக்கான பல்கலைக் கழக ஆசிரியர்களின் அமைப்பு (UTHR) கோரி உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதர் கொழும்பு மட்டுமின்றி, முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள போர் நிறுத்தப் பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள பொதுமக்களின் நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இந்த அமைப்பு கோரி உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் அந்தப் பகுதிகளில் இருந்தால் அந்தப் பகுதி மக்கள் விடுதலைப் புலிகளின் தலைமையை கேள்விக்குட்படுத்தும் சக்தியைப் பெறுவார்கள் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
[வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009]

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள குடியிருப்பாளர்கள் அனைவரும் தத்தமது பகுதிகளில் உள்ள காவல்துறை நிலையங்களில் தம்மைப் பற்றிய விபரங்களை உடனடியாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு இன்று மீண்டும் அறிவித்திருக்கின்றது.

இந்த உத்தரவுக்கு அமைய தம்மைப் பதிவு செய்துகொள்ளாத எவரும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர்கள் எனவும் கொழும்பில் பல்வேறு பகுதிகளிலும் இன்று வெள்ளிக்கிழமை ஒலிபெருக்கி மூலமாக தமிழிலும் சிங்களத்திலும் காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டவிதிகளின் கீழ் வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி அறிவித்தலின்படி தமது பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் யாரும் தங்கியிருக்க முடியாது எனவும் குடியிருப்பாளர்கள் அனைவரும் அருகேயுள்ள காவல்துறை நிலையத்தின் மூலமாக அல்லது பாதுகாப்பு அமைச்சின் நடமாடும் செயலகத்தின் மூலமாக தம்மைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

பதிவு செய்துகொள்ளாமல் தமது வீடுகளில் யாரையாவது குடியமர்த்துவதும் தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சுக்குச் சொந்தமான பாரிய வெள்ளை நிற பேருந்து ஒன்றின் மூலமாகவே இந்த அறிவித்தல் இன்று காலை முதல் வெள்ளவத்தை உட்பட கொழும்பின் பல பகுதிகளிலும் ஒலிபரப்பப்பட்டது. இந்த வெள்ளை நிற பேருந்துதான் நடமாடும் செயலகமாகவும் செயற்படவிருக்கின்றது.

இதன்படி வீட்டு உரிமையாளர்கள் அனைவரும் தமது வீடுகளில் வசிப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் ஒவ்வொருவர் பற்றிய முழுமையான விபரங்களையும் காவல்துறையில் பதிவு செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு வீட்டு உரிமையாளர்களால் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் இரகசியமான முறையில் வைத்திருக்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடமாடும் சேவையின் மூலமாகவும் இணையத்தளத்தின் மூலமாக சுயமாகவும் தம்மைப் பற்றிய விபரங்களை குடியிருப்பாளர்கள் பதிந்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்மை ஏற்கனவே பதிந்து கொண்டவர்களும் புதிதாகப் பதிந்துகொள்ள வேண்டியுள்ளவர்களும் நாளை மறுநாள் வெள்ளவத்தை பாமன்கடை பகுதியில் நடைபெறும் நடமாடும் செயலகத்தின் மூலமாக தமது பதிவை மேற்கொள்ள அல்லது புதுப்பித்துக்கொள்ள முடியும் எனவும் இன்று அறிவிக்கப்பட்டது.
[வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009]

இலங்கையில் இனப்படுகொலைக்கு உள்ளாகும் தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி இன்று மேலும் ஒருவர் தீக்குளித்திருக்கின்றார்.

கரூரைச் சேர்ந்தவர் ஆ.சிவானந்தம் (வயது 46). சென்னைக்குச் சென்ற இவர், இன்று வெள்ளிக்கிழமை இரவு 8:15 நிமிடமளவில் வடபழனியில் தமிழகத் தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு எதிரே உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீ மூட்டிக்கொண்டார்.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைத்தனர். வடபழனி காவல்துறையினர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இலங்கையில் நச்சுக் குண்டுகளை வீசி தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவே தீக்குளித்தேன் என்று மருத்துவமனையில் காவல்துறையினரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவருக்கு உடலில் 80% தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தீக்குளித்த இளைஞர் சிவானந்தத்தை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை எதிர்த்து தமிழ்நாட்டில் முத்துக்குமார் தொடங்கி ஏற்கெனவே 12 பேர் தீக்குளித்துள்ளனர்.
[வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009]

அனைத்துலக நாடுகள் எத்தகைய அழுத்தங்களை கொடுத்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோருடன் அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

படையினரின் தியாகங்களுக்கு மாறான செயற்பாடுகள் எதனையும் அரசாங்கம் செய்யாது. அத்துடன் சிறுதுண்டு காணி கூட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்பதும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு என்று கூறிய அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, புலிகள் முற்றாக அழிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக நாடுகள் நிதி உதவி வழங்குவதற்கு விதிக்கும் நிபந்தனைகள் எதனையும் அரசாங்கம் ஏற்கவில்லை. சிறிலங்காவின் தேசியத்தை புலிகளின் பிடியில் இருந்து காப்பாற்றினோம். அதேபோன்று அனைத்துலக ஏகாதிபத்தியவாதிகளுக்கு தேசியத்தை தாரை வார்க்க மாட்டோம் என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சூளுரைத்தார்.
[வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009]

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடரும் போரின் பிடியில் சிக்கியுள்ள மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான முறையில் வெளியேறுவதற்கு வசதியாக சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தம் ஒன்றைச் செய்துகொள்ள வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை அவசரக் கோரிக்கையினை விடுத்துள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த இரண்டு நாள் போர் நிறுத்தம் எந்தவிதமான பலன்களையும் தராமல் முடிவடைந்திருக்கின்றது.

இந்நிலையில் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள நிலைமைகள் தொடர்பாக அறிந்துகொள்வதற்காக அங்குள்ள மருத்துவ அதிகாரிகள் இருவரை அனைத்துலக மன்னிப்புச் சபை தொடர்பு கொண்டபோது அங்குள்ள மோசமான நிலைமைகள் தொடர்பாக அவர்கள் விவரித்துள்ளார்கள் எனவும் மன்னிப்புச் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான விநியோகங்கள் அங்கு போதுமானதாக இல்லாமையால் அவசரமான மனிதாபிமான உதவிகள் அங்கு தேவைப்படுவதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்திருக்கின்றது.

போர் தீவிரமடைந்திருக்கும் நேற்றைய நாள் வியாழக்கிழமை மட்டும் காயமடைந்த 92 பேர் மருத்துவனைக்கு கொண்டுவரப்பட்டதாக மருத்துவத்துறைப் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்நாள் 75 பொதுமக்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவித்த மற்றொரு மருத்துவப் பணியாளர், இதில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மருந்துப் பொருட்களின் கையிருப்பு மிகவும் குறைவாகவே இருப்பதாகவும் தெரிவித்த அவர், மயக்க மருந்து, சத்திர சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பிளேட் மற்றும் அடிப்படையான ஏனைய மருத்துவப் பொருட்களும் கையிருப்பில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

போர் இடம்பெறும் பகுதி சிறிலங்கா அரசாங்கத்தினால் முற்றுகையிடப்பட்டு, உதவிப் பணியாளர்களோ அல்லது சுயாதீனமான மனித உரிமைகள் அவதானிகளோ அந்தப் பகுதிக்குச் செல்ல முடியாது தடை விதிக்கப்பட்டுள்ளதால், இந்தச் செய்திகளை உறுதிப்படுத்த முடியாது இருப்பதாகவும் அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்திருக்கின்றது.

தொடரும் இந்த போரால் இந்த வருட தொடக்கத்தில் இருந்து 2,800-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டும், 7,000-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தும் இருப்பதாக மார்ச் மாதத்தில் ஐ.நா. வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"மனிதாபிமான அடிப்படையிலான போர் இடைநிறுத்தம் ஒன்று உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்" என வலியுறுத்தியிருக்கும் அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய பசிபிக் பிராந்தியப் பணிப்பாளர் சாம் சாரிப், "தொடரும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் ஆபத்தான நிலைமைக்குள் உள்ளார்கள். அவர்கள் தமது உயர்களையிட்டு அச்சத்துடனேயே உள்ளனர்" எனவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

"விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் செல்வதை உறுதிப்படுத்துவதற்காக சுயாதீனக் கண்காணிப்பாளர்களை சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்திருக்கும் அவர், "விடுதலைப் புலிகளும் பொதுமக்களை கவசமாகப் பயன்படுத்தக் கூடாது" எனவும் தெரிவித்திருக்கின்றார்.
[வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009]

இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழின உணர்வாளர் சீமான் மீது வழங்குத் தாக்கல் செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாளைய‌ங்கோ‌ட்டை‌யி‌ல் நட‌ந்த பொது‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல் இ‌ந்‌‌திய இறையா‌ண்மை‌க்கு எ‌திராக பே‌சியதாக நெ‌ல்லை காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப்ப‌திவு செ‌ய்து இய‌க்குன‌ர் ‌சீமானை கைது செ‌ய்தன‌ர்.

சீமானின் கைதை அடுத்து அவரது சகோதரர் சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் மனு‌‌த் தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர்.

இந்த மனு ‌‌மீதான ‌விசாரணை நடத்திய நீதிபதிகள் தர்மாராவ், ‌சி.டி.ச‌ெ‌ல்வ‌ம் ஆ‌கியோ‌ர் இ‌ந்‌திய இறையா‌ண்மை‌க்கு எ‌‌திராக பே‌சியதாக கூ‌றி தே‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்த‌ி‌ன் ‌கீ‌ழ் வழ‌க்கு போட முடியாது எனவும் தே‌சிய பாதுகா‌ப்பு ச‌ட்ட‌த்‌தி‌ன் ‌‌‌‌‌கீ‌ழ் கைது செ‌ய்ய உ‌த்தர‌வி‌ட்ட நெ‌ல்லை மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ரி‌ன் உ‌த்தரவை ர‌த்து செ‌ய்வதாக ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: