செவ்வாய், 7 ஜூலை, 2009

2009-07-07



More than a Blog Aggregator

by அருட்பெருங்கோ
நடந்து வந்து வீட்டுக்குமுன் படுத்துவிட்ட ஓவியம்போல
பக்கத்துவிட்டுப் பெண் தீட்டிவைத்த வாசல்கோலம்
மாலை வெயில் பட்டு மினுங்கிக் கொண்டிருக்கிறது.

எதிரில் வீடு கட்டுவதற்காய்க் குவித்து வைத்த ஆற்றுமணலில்
மணல்வீடு கட்டும் சிறுமிகளின் கைகளில் வழிந்துகொண்டிருக்கிறது
அடுத்த சிறுமியின் வீட்டுக்கான மணலும் அன்பும்.

போலிஸ்காரர்வீட்டின் வாசல்படியில் அமர்ந்துகொண்டு
கதைபேசும் நான்கைந்து கிழவிகளின் சிரிப்பில்
கடந்தகாலத்துக்கு நடைபோடுகிறதிந்த தெரு.

சுற்றுச்சுவரின்மீது எட்டிப்பார்த்து கீழே தொங்கும் பூஞ்செடி
கூந்தலிலெல்லாம் பூக்கள் சூடிக்கொண்டு மணப்பெண்ணென
தெருவையே வெட்கம் சுமந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

சற்றுநேரத்தில் வரப்போகிற
...தண்ணீர்லாரியினால் அழியக்கூடுமந்த கோலம்.
...மேஸ்திரியாள் துரத்தியதும் மணல்வீடுகள் மறுபடியும் வீட்டுமணலாகும்.
...போலிஸ்காரரால் நிகழ்காலத்துக்கு திரும்பிவிடும் தெரு.
...விபூதிக்காரரின் விரல்கள் கிள்ளி பூவிழந்து விதவையாகும் பூஞ்செடி.

அதனாலென்ன?
இருக்கும்வரை பார்த்துக்கொள்ளலாம்.
இல்லாது போனதும் நினைத்துக்கொள்ளலாம்.

பதிவுகளை செய்தியோடை மூலம் வாசிப்பதற்கு நன்றி நண்பரே! அழியாத அன்புடன், அருட்பெருங்கோ.



More than a Blog Aggregator

by அருட்பெருங்கோ
குருதி தோய்ந்த நகங்களை நாவால் நக்கியபடி,
உயிர் குடிக்கும் உக்கிரத்துடன்
பதுங்கி பதுங்கி திரும்பவும் வருகிறது.
சிக்கிவிட்ட இரையென நடுங்குகிறேன் நான்.
இரக்கமேதுமின்றி மீண்டுமொருமுறை
என்னைக் கொன்றுவிட்டு
சலனமேயில்லாமல்
என்னருகிலேயே படுத்துறங்குகிறது உன் நினைவு.
மறுபடியும் உயிரூட்டி
மரண விளையாட்டு விளையாட!

*

நம் காதலின்
மிக நீண்ட உரையாடல்
உனது மௌனம்.

*

அழகான கவிதையாய்
நுழைந்தவள்
கனமான கவிதையை
விட்டுச் செல்கிறாய்

*

நீ. நான். காதல்.
முக்கோண விளையாட்டில்
எப்போதும் தோற்கிறோம்
நானும் காதலும்.

*

நாளை முதல்
உன்னை மறந்துவிடுவதாக சொன்னது உண்மைதான்.
ஆனால் எல்லா 'நாளை'க்கும் ஒரு 'நாளை' இருக்கிறது.

பதிவுகளை செய்தியோடை மூலம் வாசிப்பதற்கு நன்றி நண்பரே! அழியாத அன்புடன், அருட்பெருங்கோ.



More than a Blog Aggregator

by அருட்பெருங்கோ
பார்வைகளை எனக்களித்துவிட்டு
வெறும் கண்களை மட்டும் வைத்துக்கொண்டு
என்ன செய்வான்?

*

எப்பொழுதும் கண்களையேப் பார்க்கிறானே
என்னைக் காதலிக்கிறானா?
கண்ணைக் காதலிக்கிறானா?

*

தினமும் பார்வையை வாங்கிக்கொண்டு
வெட்கத்தைக் கொடுக்கிறேன்.
மறுநாள் சந்திப்பிலோ வாங்கிய பார்வை அவனிடமும்
கொடுத்த வெட்கம் என்னிடமுமே மிஞ்சுகிறது.

*

ஒரே ஒரு முத்தமென்று கெஞ்சுகிறான்.
என்னிடம் இதழ்வசம் முத்தமே இல்லை.
இவனே கடன் கொடுத்தால்தான் என்ன?

*

என்ன சொன்னாலும் தலையாட்டுகிறவனை சீண்டுவதற்காகவே
'சண்டை போடலாமா?' என்று கேட்டால்…
'சண்டையெல்லாம் கூடாது' என்று சண்டைக்கு வராமல்
அதற்கும் 'சரி'யென்று தலையாட்டுகிறவனிடம் எப்படி சண்டை போட?

பதிவுகளை செய்தியோடை மூலம் வாசிப்பதற்கு நன்றி நண்பரே! அழியாத அன்புடன், அருட்பெருங்கோ.

கடலினும் ஆழமானக் காதலுடன்
கடற்கரையில் காத்திருக்கத் துவங்குகிறாள் காதலியொருத்தி.

அவள் பார்த்தால் நெருங்குவதும் முறைத்தால் விலகுவதுமாய்
அலைந்து கொண்டிருந்தது கடல்.

நிலையாக நின்ற பாதத்தை நிலம் முத்தமிடத் துவங்கவும்
அங்குமிங்கும் நடக்கத் துவங்குகிறாள்.

நடக்கும் பாதம் உண்டாக்கிய காதல் ஓவியங்களை
கடலுக்குக் கடத்துறது அவளுக்குத் தெரியாமல் வந்த அலை.

காற்றுக்கும் யாரோ தூதனுப்ப தென்றல் உடையில் அதுவும் வந்து விட
தேவதையின் சிறகென தென்றலில் பறக்கும் துப்பட்டாவை அவள் இழுத்து நிறுத்தும் வேளையில்
தேவதைகள் ஏமாந்து போகின்றன.

ஒளிர்வதற்கு போட்டிவந்ததும் சூரியன் ஒளிந்துகொள்ள
உலகத்தின் ஒளிக்கு நிலவை அழைப்பதா இவளே போதுமா என்று குழம்புகிறது வானம்.

இவையெதனையும் கண்டுகொள்ளாமல்
எந்த கணத்திலும் பதுங்குதல் பாய்தல் என இரண்டுக்கும் தயாரான பார்வையை
கண்களில் ஒளித்துக்கொண்டு காதலனை மட்டுமே தேடுகின்றன அவள் கண்கள்.

தொலைவில் வரும் காதலன் கண்களைக் கண்டதும்
கண்களால் வல்லின சண்டையொன்று முடித்தவள்,
நெருங்கியதும் காற்றுக்கும் வலிக்காமல்
மெல்லின மொழியொன்றில் சொற்களை உச்சரிக்கத் துவங்குகிறாள்.

இப்பொழுது
எழுதுவதையும் வாசிப்பதையும் நிறுத்தி,
இமைகளை மூடிக்கொண்டால்…
காதலி தெரிகிறாள்!

பதிவுகளை செய்தியோடை மூலம் வாசிப்பதற்கு நன்றி நண்பரே! அழியாத அன்புடன், அருட்பெருங்கோ.



More than a Blog Aggregator

by அருட்பெருங்கோ
வாசிக்கப்படாத தனது கவிதையொன்றை
வாசக சந்தையில் சுமந்து திரியும் கவிஞனை,
துரத்திக்கொண்டே இருக்கின்றன...
எழுதப்படாத பல கவிதைகள்!

*

ஷேர் ஆட்டோவின் மூவர் அமரும் பின்னிருக்கையில்
பெண்கள் இருவர் அமர்ந்திருக்க,
முன்பக்கம் ஓட்டுநர் அருகே அமர்கிறேன்.
சிரித்துக் கொண்டார்கள் இருவரும்.
நான் இன்னும் பண்படவேண்டுமென
நினைத்துக்கொண்டிருக்கலாம்.
பரவாயில்லை.
இயல்பாய்ப் பக்கத்தில் அமர்ந்திருக்கும்போதும்
தள்ளி தள்ளி அமர்ந்து சங்கடப்படுத்துவதைக் காட்டிலும்
இது மேல்!

*

கடவுளைத் திட்டி எழுதியபோது
என்னிடம் கேட்கப்பட்டது - 'நீ நாத்திகவாதியா?'
அப்புறம் பெண்ணின் வலிசுமந்த ஒரு கவிதைக்கு – 'ஆண் பெயரில் எழுதும் நீ பெண் தானே?'
வன்கொடுமையை எதிர்த்து பேசியதும் – 'நீ தலித்தா?'
காதல் கவிதையெழுதும்போதெல்லாம் – 'உண்மையைச் சொல், நீ காதலிக்கிறாய்தானே?'

இப்பொழுது மரணம்பற்றிய கவிதையெழுதிக்கொண்டிருக்கிறேன்.
என்ன கேள்வி வரும்?

*

தோட்டத்து தென்னைமரம்
இடிவிழுந்து தீப்பிடித்த நாளில்
எனக்கும் நடை முடங்கியது.
பிறகு படுக்கையே வசிப்பிடம்.
பேச்சும் குழறி பின்னொருநாள் முழுவதுமாய் ஊமை.
ஒருவாரத்தில் செவியின் மரணத்தால் உலகமே அமைதி.
எழுபது வயதில் கணவருக்கு பாரமாய் இருக்கவே பிடிக்கவில்லை.
விட்டுப் போகவும் மனமில்லாமல் கண்ணீர் விடுகிறேன்.
எதிரில் கணவரும் அழுவது தெரிகிறது.
நெடுநாள் முன்பு இதேமாதிரி
தனியே என்னை அழவைத்து விலகிய
'அவனை' நினைத்துப் பார்த்ததும்,
எதிரில் கணவர் அழுவது தெரி...

*

பதிவுகளை செய்தியோடை மூலம் வாசிப்பதற்கு நன்றி நண்பரே! அழியாத அன்புடன், அருட்பெருங்கோ.



More than a Blog Aggregator

by அருட்பெருங்கோ
தொலைந்து போய் அழும்பிள்ளையின் துயரும்
தொலைத்துவிட்டுக் கதறும் தாயின் வலியும்
ஒன்றாகத் தந்தாய்.

பாதி உயிரை இழந்த உடலின் கதறலும்
உடல் நீங்கிய உயிரின் தவிப்பும்
ஒன்றாகத் தந்தாய்.

பார்வையற்ற கண்களின் இருமையும்
வாயில்லா இதயத்தின் வெறுமையும்
ஒன்றாகத் தந்தாய்.

இனிமைகொள்ள ஒரு நினைவும்
தனிமைகொல்ல ஒரு நினைவும்
ஒன்றாகத் தந்தாய்.

எடுத்துப்போன இதயத்தை மட்டும் ஏன்
இரண்டாகத் தந்தாய்?

பதிவுகளை செய்தியோடை மூலம் வாசிப்பதற்கு நன்றி நண்பரே! அழியாத அன்புடன், அருட்பெருங்கோ.

கருத்துகள் இல்லை: