புதன், 19 நவம்பர், 2008

tamil tamilveli.com politics cinema blog 2008-11-15

கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு குடும்பத்தில் ஏற்படுத்தும் இழப்புகளை
மிக விரிவாய் நாயகனின் பார்வையில் சொல்லும் நாவல் "ஏறு வயல்".சமுதாய மாற்றங்களினால் கிராமங்கள் மறைகின்றன,விலை நிலங்கள் அழிகின்றன,குடும்ப உறவுகளுக்குள்ளான பிரியங்கள் பின் தள்ளப்பட்டு பணம் முதன்மை பெறுகின்றது இவை யாவையும் ஒரு குடும்பத்தின் நிகழ்வுகளோடு சொல்லி இருக்கின்றார் பெருமாள் முருகன்.எந்த வித சமரசமும் செய்து கொள்ளாது கையாண்டுள்ள எழுத்து நடை,கோவை வட்டார பேச்சு மொழி நாவலின் எதார்த்த தன்மையை கூட்டுபவை.

காலனி வீடுகள் கட்ட அரசாங்கத்திற்கு தம் வீட்டையும்,விளை நிலங்களையும் விற்றுவிட்டு பிழைக்க வழி தேடி பிரிகின்றனர் பொன்னையனின் உறவினர்கள்.அந்த சோகத்தின் நீட்டிப்பாய் தொடர்கின்றன பின் வரும் நாட்கள்.தினமும் பணத்தை முன்வைத்து தாய் தந்தைக்கு இடையே நடக்கும் சண்டைகள்,பிள்ளைகளால் தவிர்க்க படும் பொன்னையனின் தாத்தா - பாட்டி,தீய பழக்கங்களுக்கு ஆளாகும் அண்ணன்,சுயநலம் மிகுந்து அறுபடும் உறவுகள் என தன்னை சுற்றி நடப்பவைகளை மௌனியாக கவனிக்கும் பொன்னையனின் பார்வையில் கதை நகர்கின்றது.



1980 களில் கதை நிகழ்வதாய் உள்ளது.அந்த கால கட்ட அரசியல்,சினிமா குறித்த கிராமத்து மக்களின் ரசனை/ பார்வை,திருவிழா நேர கலாட்டாக்கள்,கிராமத்தில் இருந்து புதிதாய் கல்லூரிக்கு செல்லும் மாணவனின் அனுபவங்கள் என கதோயோட்டதொடு சேராமல் துண்டு துண்டாய் பல காட்சிகள் வர்ணனை செழிப்போடு வருகின்றது.இருப்பினும் அக்காலகட்ட விவரிப்புகள் சுவாரஸ்யம் கூட்டுபவையே.

இந்நாவலின் மனிதர்களை சுலபமாய் இருவகையாய் பிரிக்கலாம்.வாழ்வும்,சூழலும் மாறினாலும் மண்ணின் மீதும்,சக உறவுகள் மீதும் கொண்டிருக்கும் பிரியம் குறையாது இருப்பவர்கள்.பொன்னையன்,பொன்னையனின் அப்பா,தாத்தா,பாட்டி இவ்வகையினர்.சூழ்நிலைகேற்ப தம்மை வளைத்து கொண்டு பணத்தை பிரதானமாய் கொண்டு அந்தந்த நேர பொழுதை கழித்தால் போதும் என்னும் மனநிலை கொண்ட பொன்னையனின் தாய்,அக்கா,தி.மு.க வின் மொண்டி ராமு ஆகியோர்.இரு வகையினருக்கும் பொதுவாய் அமைந்து இருப்பது ஜாதிதிமிர் மட்டுமே.

நாவல் குறித்த தம்முடைய உரையில் எழுத்தாளர் விக்ரமாதித்யன் தமிழின் இதுவரை வெளிவந்துள்ள சிறந்த நாவல்களான "புயலிலே ஒரு தோணி","நித்ய கன்னி","நாளை மற்றும் ஒரு நாளே" ,"ஒரு புளிய மரத்தின் கதை" வரிசையில் இந்நாவலும் சேர்த்தி என குறிப்பிட்டுள்ளார்.அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.

நூல் வெளியீடு - மருதா பதிப்பகம்
நாவலோ சிறுகதையோ படிக்கும் பொழுது அதன் மனிதர்களும்,நிகழ்வுகளும் ஏதோ ஒரு இடத்தில் நமக்கு மிக நெருக்கமாய் தோன்றலாம்.அவ்வாறு தான் மிகவும் நெருக்கமாய் உணர்ந்த சிறுகதைகளை தனக்கு நேர்ந்த நிகழ்ச்சிகளின் பின்னணி கொண்டு தொகுத்துள்ளார் பாவண்ணன்.தமிழின் தலை சிறந்த எழுத்தாளர்கள் அனைவரின் சிறுகதைகளும் இதில் அடக்கம்.நாம் படித்த மற்றும் படிக்காத சிறுகதைகளை குறித்து முற்றிலும் ஒரு புதிய கண்ணோட்டத்தில் மிக எளிமையாய் சொல்லியுள்ளார் பாவண்ணன்.


எனக்கு பிடித்த வண்ணதாசனின் "தனுமை" சிறுகதை மிக பிடித்தமானதாய் மாறிபோனது பாவண்ணனின் விமர்சனம் படித்த பின்னரே.சிறிதும் ஒத்து போகாத மனநிலை கொண்ட இருவர் ஒரே அறையில் தங்க நேரும் சங்கடத்தை சொல்லும் ஆதவனின் "ஒரு அறையில் இரு நாற்காலிகள்',விளிம்பு நிலை மக்களின் வாழ்கையை மிகையின்றி சொல்லும் ஜி.நாகராஜனின் "ஓடிய கால்கள்", விதவை தாயின் மனநிலையை சொல்லும் அசோகமித்ரனின் "அம்மாவுக்காக ஒரு நாள்", புதுமைபித்தனின் "மனித எந்திரம்" , சு.ரா வின் "பள்ளம்" என ஒவ்வொரு சிறுகதையையும் ரசித்து தம் அனுபவ நிகழ்ச்சிகளோடுகூறியுள்ளார் ஆசிரியர்.



பாவண்ணனின் சிறுகதை தொகுப்பு "கடலோர வீடு" .பெரும்பாலான கதைகள் மனிதனின் தனிப்பட்ட மனநிலையை,விருப்பங்களை முன்னிறுத்தி சொல்லப்பட்டவை.பெரியதொரு பறவைகள் சரணாலயத்தை விருப்பத்தோடு பராமரிக்கும் ஒரு முதியவரின் மனபோராட்டங்களை சொல்லும் கதை "பறவைகள்".
புராண நிகழ்வின் புனைவாக கிருஷ்னையை மணக்க வைக்கப்படும் சுயம்வரத்தில் வென்றிட துடிக்கும் துரியோதனனின் ஒவ்வொரு நொடி மனவோட்டத்தையும் விவரிக்கும் கதை "இன்னும் ஒரு கணம்".

முதியோர் இல்லத்தில் தங்க வைக்கபட்டிருக்கும் நண்பனின் உறவினரை காண செல்லும் நாயகனின் ஒரு நாள் பொழுதினை,தாள முடியாத சோகத்தில் தள்ளும் அப்பெண்மணியின் நிலையை வெகு நேர்த்தியாய் சொல்லும் கதை "விளிம்பின் காலம்" .பெருகி வரும் முதியோர் இல்லங்கள் மலிந்து வரும் பந்த பாசத்தை மறைமுகமாய் உணர்துபவையே!!நவீன உலகில் பிராணிகளுக்கு அளிக்கப்படும் மதிப்பும்,பிரியையும் சக மனிதர்களுக்கு தரப்டுவதில்லை என்பதை சற்றே நகைச்சுவை கலந்து சொல்லும் சிறுகதை "பாதுகாப்பு".


பாவண்ணனின் எழுத்துலகம் சராசரி மனித வாழ்வின் அவலங்களை வெகு நுட்பமாய் எடுத்தாளுகின்றது.மிக கடினமான கருத்துக்களை கதை போக்கில் இயல்பாக உணர்த்தி, மிக அழுத்தமாக பதிவு செய்கின்றார்.

"எனக்கு பிடித்த சிறுகதைகள்" - காலச்சுவடு வெளியீடு
"கடலோர வீடு" - காவ்யா வெளியீடு


எனது பால்ய கால ஏக்கங்களில் முக்கியமான ஒன்று ரயில் பயணம்..கல்லூரி முடித்து சென்னையில் பணியில் சேர்ந்த பிறகு ரயில் பயணம் என்பது தவிர்க்க முடியாததாகி போனதோடு சுவாரசியம் கூட்டும் அனுபவமாய் மாறிப்போனது.மிக விருப்பத்திற்குரியது வாசிப்பிற்கு அனுகூலமான நீண்ட பகல் பொழுது பயணங்கள்.ஜன்னல் காட்சிகள் துண்டிக்கப்படும் குளிர்வசதி கொண்ட ரயில் பெட்டி பயணம் தண்டனை அனுபவிப்பது போன்ற நிலையில் தள்ளும்..எல்லாவற்றிற்கும் மேலாக அரிதாய் புன்னகைக்கும் சக பயணிகள்,தொடர் சேட்டைகளால் கவனம் பெரும் சிறுவர்கள்,இரவில் ஒளிரும் நதிகள்,உடன் நகரும் வயல்வெளிகள்,மரங்கள், நாகை,நெல்லை,மதுரை என சரளாமாய் புரளும் வட்டார மொழிகள் என சுவாரசியத்திற்கு குறைவில்லாத ரயில் பயணங்கள் சலிப்பற்று தொடர்கின்றது!!

*************************************

வாசிப்பு..புத்தக வாசிப்பு தொடர் ஆட்டத்தில் பங்கு கொண்டு கேள்விகளுக்கான பதில் எழுதும் பொழுது வாசிப்பு மீது கொண்டிருக்கும் ஆர்வமும்,முற்று புள்ளி அற்று தொடரும் அதன் சுழற்சியில் சுகமாய் பயணிப்பது குறித்து யோசிக்க செய்தது.வாசிப்பு என்றைக்குமே திணிக்கபட்டு வருவதில்லை,தேடல் மிகுதியின் தொடர்ச்சியாய் வருவது!!சமீபத்தில் ஆனந்த விகடன் பேட்டி ஒன்றில் வாசிப்பு குறித்த வைரமுத்துவின் "வாசிப்பு மனிதனை விசாலபடுத்துவது.வாசிப்பு உலகம் வாசகன் வாழாத உலகத்தை அவன் வாசலுக்கு கொண்டு வருவது " என்கின்றன வரிகள் வெகு உண்மையாய் தோன்றியது.நெருக்கடி மிகுந்த தினசரி வாழ்வில் காண கிடைக்காத உலகம் குறித்த தேடல் மிக அவசியமே!!சமீபத்திய பண்டிகை விடுமுறையில் தொடர்ந்து மூன்று நாட்கள் வாசிக்காமல் இருந்தது வெறுமையாய் உணர செய்தது..சென்னை பட்டணம் நெருங்க நெருங்க அந்த வெறுமை தேவை ஆகா உருமாறி ரயிலிலேயே வாசிப்பை தொடங்கி விட்டேன்...

**********************************************




முன் எப்போதும் இல்லாத அளவு ஒரு பாடலின் மீது பைத்தியம் கொண்டு, எத்தனை முறை கேட்டிருப்பேன் என கணக்கில் கொள்ளாது தொடர்ந்து ரசித்து கொண்டிருகின்றேன் சுதா ரகுநாதனின் குரலில் வரும் வாரண ஆயிரம் படப்பாடல் "அனல் மேலே பனித்துளி....." யை.சுதாவின் முந்தைய இரு திரை பாடல்கள் அதிக கவனம் பெறவில்லை..ராஜாவின் இசையில் இவன் படப்பாடல் "எனை என்ன செய்தாய்.." அற்புதமான தொடக்கமாய் இருந்த போதிலும் ஏனோ வெகுஜன ரசிப்போடு ஒன்றவில்லை.

கர்நாடக இசையை பொறுத்த மட்டில் எனது அறிவும்,ரசனையும் பூஜ்யம்.நேர் எதிராய் கர்நாடக சங்கீதத்தில் அப்பாவிற்கு உள்ள ஈடுபாடும்,சுதாவின் பாடல்களுக்கு மீது கொண்ட தீவிர ரசனையாலும் இப்பாடலை கேட்க முடிந்தது.மெல்ல இப்பாட்டின் வசீகரத்தில் மூழ்கி போகும்படியும் ஆனது..

"எந்த காற்றின் அளாவலில் மலர்
இதழ்கள் விரிந்தனவோ ..........."

"சந்தித்தோமே கனாக்களில் சில முறைய பலமுறையா
அந்தி வானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா........"

தேர்ந்தெடுத்த வார்த்தைகளை கொண்டு முழுமை அடைவது தாமரையின் வரிகள் ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் புதுவித அனுபவம் தந்தபடி தொடர்கின்றது!!
சரித்திர நாவல்கள் தரும் கற்பனை வெளி எல்லை அற்றது.அரண்மனைகளும்,போர் படைகளும்,அரச குமாரிகள் குறித்த வர்ணனைகளும் சொல்லபட்டதிற்கு மேல் அதிகமாய் எண்ணி வியக்க கூடியவை.25 ஆண்டுகளுக்கு முன் வெளி வந்த 'நித்யகன்னி" புராண சம்பவம் ஒன்றினை அடிப்படையாய் கொண்டது.மிகுந்த வர்ணனைகள் அற்று பெண் உடலை முன்னிறுத்தி பின்னபட்டிருக்கும் இந்நாவல் அந்த காலகட்டத்தில் பெரிதும் பேசப்பட்டதில் வியப்பில்லை.

விசுவாமித்திர முனிவரின் சிஷ்யனான காலவன் குரு தட்சணையாக முனிவருக்கு 400 அதிசய வெண் புரவிகளை அளிக்க பணிக்கிறான்.பேரு வள்ளலான யயாதி மன்னனின் மகள் மாதவி 'நித்யகன்னி' வரம் பெற்றவள் என்பதை அறிந்து அவரிடம் சென்று அவளை பெற்று பின் அப்புரவிகள் உள்ள மன்னர்களுக்கு அவளை மணமுடித்து தன் குரு சேவையை நிறைவு செய்ய முடிவு செய்கிறான்




இந்நிலையில் காலவன் வந்த நோக்கம் அறியாது அவன் மீது காதல் கொள்கிறாள் மாதவி.மாதவி என்று அறியாது காலவனும் அவள் அழகில் மையல் கொள்கிறாள்.காலவனின் முடிவை மாற்றிவிடலாம் என எண்ணி அவன் உடன் புறப்படுகிறாள்.விசுவாமித்திர முனிவரின் கடுங்கோபத்திற்கு அஞ்சி காலவன் தன் காதலியை புரவி வேண்டி மன்னர்களுக்கு மனம் முடிக்க அழைத்து செல்கிறான்.
காமுகனான அயோத்தி மன்னனை மனம் முடித்து,பிள்ளை பெற்று கன்னியாக மாறிய மாதவியை தன் பிள்ளையை விட்டு பிரித்து அறத்தின் மீது பெரு நம்பிக்கை கொண்ட காசி மன்னனை மணக்க அழைத்து செல்கிறான் காலவன்.


அயோத்தி மன்னனும்,காசி மன்னனும் மாதவியின் அழகின் பொருட்டே அவளை மணக்க சம்மதித்து,அவள் உள்ளம் அறியா நடந்துகொள்கின்றனர்.காமம்,ஆறாம் தவிர்த்து கலைகளின் மீது ஆர்வம் கொண்ட மூன்றாவது மன்னன் மாதவியின் குணம் அறிந்து அவளை காலவனோடு செல்ல அனுமதிக்கிறான்.துயரங்கள் யாவும் முடிவுற்றது என எண்ணி காலவன்,மாதவியை மனம் செய்ய இருக்கும் தருணம் அவள் அழகில் மயங்கி விசுவமித்ரர் அவளை மணக்க முடிவு செய்து,தன் குடிலில் தங்க செய்கிறார்.



தொடர் திருமணங்களாலும்,ஸ்திர புத்தி அற்ற காதலான காலவனாலும் புத்தி பேதலித்து பைத்தியம் ஆகிறாள் மாதவி.பேரழகியாய்,நித்ய கன்னியாய் அரண்மனையில் உலா வந்த மாதவி,தனக்கு சிறிதும் சம்பந்தம் அற்ற விச்வாமித்ரரின் சாபத்திற்கு பலியாகி வாழ்கை முழுதும் தொடர் அல்லல்களால் சுழட்டி அடிக்கபடுவதை மிகை இன்றி,பெரும்பாலும் மாதவியின் மனநிலை கொண்டு விளக்கி உள்ளார் எம்.வி.வெங்கட்ராம்.

எந்த ஒரு கால கட்டத்திற்கும் பொருந்தி போகும் கதை இது.தனிப்பட்ட விருப்பத்திற்கு மாறாக,சுயேச்சையாக முடிவு எடுக்க வழியின்றி எப்போதும் எவரையேனும் சார்ந்து வாழும் நிலை பெண்களுக்கு நம் சமூகத்தில் இன்றும் உண்டு.பெண் உடல் குறித்த சமூகத்தின் பார்வையை மாதவி மணக்கும் மூன்று மன்னர்களின் குணங்களாய் கொள்ளலாம்.காமம் மிகுந்த,அற ஒழுங்கம் பற்றி,போற்ற பட வேண்டிய அழகிய கலை போல நோக்கப்படும் பார்வைகளில் பெண்ணிற்கு மிக விருப்பமானதாய் இருப்பது மூன்றாவதே!!

மிக கடினமான கருத்தை சரித்திர பின்னணியுடன் புனைந்து அழுத்தமாக பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.நாவல் முடியும் தருவாயில் அதன் சாரத்தை முழுதாக உணர முடிந்தது,ஒவ்வொரு காட்சிக்கும் ,உரையாடல்களுக்கும் பல்வேறு உட்பொதிந்த அர்த்தங்கள் உண்டு.தனது கிளாசிக் நாவல்கள் வரிசையில் காலச்சுவடு இந்நாவலை வெளியிட்டுள்ளது..


வெளியீடு - காலச்சுவடு
விலை - 100 ரூபாய்
இப்பொதெல்லாம் அந்த மருந்துக்கு இந்த பக்க விளைவு. இந்த மருந்துக்கு அந்த பக்க விளைவு என்றெல்லாம் பேசுகிறார்கள்.
சில நபர்கள் (?மருத்துவர்கள்) தாங்கள் உபயோகப்படுத்தும் பொருட்களுக்கு (?மருந்துகளுக்கு) எந்தவித பக்க விளைவுகளுமே கிடையாது என்றெல்லாம் பேசுகிறார்கள். இந்த மருந்துகள் இறைவனால் கொடுக்கப்பட்டது. அதை எங்கள் தாத்தாவுக்கு தாத்தா நேரடியாக வாங்கி எங்களுக்கு கொடுத்திருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
ஒரு மாணவன் என்ற முறையில் எனக்கு சில கேள்விகள் தோன்றுகின்றன.
இயற்கையாக கிடைக்கும் தண்ணீரை 5லிட்டர் குடித்தால் தலைவலி வருமே அதை பக்க விளைவு என்றுதானே கூறுவோம்
உப்பினை அரைகிலோ சாப்பிட முடியுமா? சாப்பிட்டால் என்ன நடக்கும். அது பக்க விளைவு அல்லவா?
பத்து பச்சை மிள்காயை சாப்பிட்டால் வயிறு புண்ணாகுமே அது பக்க விளைவு அல்லவா?
இந்த வாதங்களின் படி பார்த்தால் எல்லா பொருட்களுமே சரியான அளவில் உபயோகப் படுத்தாவிட்டால் கண்டிப்பாக பக்க விளைவுகள் தோன்றியே தீரும். மருந்துகளுக்கு கண்டிப்பாக கற்றறிந்த ஒருவரின் அறிவுரை மிக அவசியம்.
அதுவும் கொடிய வியாதிகளுக்கு எதிராக உபயோகப்படுத்தப் படும் மருந்துகள் இருபுறமும் கூரான கத்திதான்.
எல்லாம் சரிதான். கடவுள் நேரடியாகத் தோன்றி தாத்தாவுக்கு தாத்தாவிடம் கொடுத்த மருந்துக்கும் அதே நிலைதானா ......
இந்த விசயங்களெல்லாம் மதுரை தமிழ்சங்கத்தில் போட்டி வைத்து தருமி பாட்டோடு வந்து விளக்கினால்தான் புரியும்........... >
அது வரை வியாதியின் கஷ்டமா? அல்லது மருந்து தரும் கஷ்டமா?மருத்துவரிடம் ஆலோசித்து எதுவாயிருந்தாலும் அவர் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு போய்கொண்டே இருப்போம்
'Tamilish'
மருத்துவர் தாக்கப் படுவதால் ஏற்படும் விளைவுகள்:-
1.மருத்துவருக்கு பயம் அதிகரிக்கும். நோயாளியை இன்னும் சிறப்பாக கவனம் செலுத்தப்படும் நவீன கருவிகள் கிடைக்கும் இடத்துக்கு அனுப்புவார். தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும்.
2.நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடைவெளி அதிகரிக்கும். இது என்றுமே நல்லதல்ல.
3.பாதுகாப்பு தேவைப்படும் இடத்திற்கு மருத்துவர் இடம் பெயர்வார். அப்போது சிறு நகரங்கள், கிராமங்களில் மருத்துவ செவை குறைவு ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.
4.மருத்துவமனையில் உள்ள விலையுயர்ந்த உபகரணங்கள் உடைபடும்போது (தனயார்துறையானாலும்) அது நாட்டிற்கு பொருளாதார நாசம்தான்.
5.பாதுகாப்பு காரணங்கள் அதிகரிக்கும்போது ஒரு எந்திரதனமான சூழ்ல் ஏற்படும். கருவிகளும் பரிசோதனையும் அதிகரிக்கும்போது செலவுகளும் அலைச்சலும் அதிகரிக்கும் நிலை ஏற்படும்.
6.பாதுகாப்பற்ற சூழல் எந்த வேலையையும் அதன் தரத்தினை மிக மோசமாக்கி விடும்.
7.அடுத்தவர் மேல் அதிகாரம் செய்யும் மனநிலையில் இருப்பவர்கள் செய்யும் இது போன்ற செயல்கள் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு பெரிய இழப்பாக அமைகிறது.
8.பெரும்பாலும் குடிபோதையிலேயே இருப்பவர்களும், உள்ளூர் ராஜா என்ற நினைப்பில் இருப்பவர்களுமே இது போன்ற அராஜக செயல்களில் ஈடுபடுகிறார்கள். கண்டிப்பாக சரிசெய்யப்பட வேண்டிய ஒன்று. உணர்ச்சிவசப்பட்ட சூழ்நிலையில் நடப்பது என்பது அரிதாகவே இருக்கிறது.
9.இது போன்ற சூழ்நிலைகளீல் பெறுவாரியான மக்கள் மருத்துவருக்கு ஆதரவாகவே இருக்கின்றனர். ஆனால் சமூக விரோதிகளுக்கு பயந்துகொண்டு நிகழ்ச்சி நடக்கும்போது வேடிக்கை பார்ப்பார்கள். (பின்னர் வந்து வருத்தம் தெரிவிப்பார்கள்). அந்த மக்கள் அனைவரின் ஆதரவும் தனக்கு இருப்பதாக நினைத்துக் கொண்டு சமூக விரோதிகளின் ஆட்டம் அதிகரிக்கும். மருத்துவருக்கும் அனைவரிடமும் ஒரு அருவருப்பு உண்டாகும்.
10.மொத்தத்தில் மருத்துவர் அடுத்தநாள் நோயாளியைப் பார்க்கும்போது பயந்துகொண்டு சீக்கிரம் நோயாளியிடம் இருந்து தப்பித்தால் போதும் என்ற என்னத்தில் பார்க்கும் நிலையே ஏற்படும்.

கருத்துகள் இல்லை: