
ஆஸ்கர் வென்றதற்கு பாராட்டுவிழா, புதுப்படங்களுக்கு தேதி என்று யாராவது தேடி வந்தால் இப்போது ரஹ்மான் கூறுவது கிட்டத்தட்ட இந்த வார்த்தைகளைத்தான்!
கூட்டம், விழாக்கள், நெருக்கடி... ஆரம்பத்திலிருந்தே இவையெல்லாம் ரஹ்மானுக்கு ஏக அலர்ஜி. ஏதாவது விழாவில் அவரைப் பேசச் சொன்னாலும்கூட, எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறிவிட்டு வந்துவிடும் கூச்சசுபாவி!
ஏகப்பட்ட விருதுகளை அள்ளிக் குவித்தாலும், ரஹ்மான் எப்போதும் தனிமை விரும்பியாகவே இருந்தார். தனது இசையமைப்பைக் கூட தனிமையில் இரவில் வைத்துக் கொள்வதுதான் அவரது ஸ்டைல்.
ஆனால் கிடைத்தற்கரிய ஆஸ்கர் விருதுகள் அதுவும் ஒன்றுக்கு இரண்டாக கிடைத்ததும், தன் மீது விழுந்த புகழ் வெளிச்சம் அவரைத் திக்குமுக்காட வைத்துவிட்டது.
திரும்பிய பக்கமெல்லாம் கொண்டாட்டங்கள்... விழாக்கள்... விருதுகள்.
இவையெல்லாம் அவரது இசைப் பணியை வெகுவாகவே பாதித்துவிட்டன. கூடவே அவரைப் பற்றி வருகிற விமர்சனங்கள், கமெண்ட் என்ற பெயரில் அவரை விமர்சித்து வரும் கருத்துக்களை போன்றவை அமைதி நாயகனான அவரையும் கோபம் கொள்ள வைத்துள்ளன.
இப்போது, இந்தியா முழுக்க சுற்றிவிட்டு சென்னைக்கு திரும்பிவிட்ட ரஹ்மான், தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் சுருக்கமாக ஒரு 'ஹலோ' சொல்லிவிட்டு வேலையை கவனிக்கப் போய்விடுகிறார். அதையும் மீறி விழா, பாராட்டு என யாராவது வற்புறுத்தினால்... 'அய்யோ... ஆளைவிடுங்க. நான் கொஞ்ச நாள் தனியா இருக்க விரும்புகிறேன்!', என்று ஒரு கும்பிடு போட்டு அனுப்பி வைக்கிறாராம்!

ஜெனீலியா கிட்டே யாரும் போக முடியவில்லையாம். வேறு காரணம் எதுவும் இல்லை. அவர் கேட்கும் சம்பளம் அவ்வளவு பெரிதாக இருக்கிறதாம்.
பாய்ஸ் படம் மூலம் ஹரிணியாகி அறிமுகமாகி இப்போது ஜெனீலியாவாக வலம் வந்து கொண்டிருக்கும் அவருக்கு தமிழில் பெரிய அளவில் முன்பு மார்க்கெட் இல்லாமல் இருந்தது.
பாய்ஸ், சச்சின், பரத்துடன் சென்னை காதல் என தொடர்ந்து நடித்தும் கூட ஜெனீலியா எடுபடவில்லை. இந்த நிலையில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் சூப்பர் ஹிட் ஆகவே ஜெனீலியாவுக்கும் பெயர் கிடைத்தது.
தற்போது இந்தியில் அவர் கிளிக் ஆகி ஜானா து யா ஜானானா-2, லைப் பார்ட்னர் என நான்கு படங்களில் நடித்து வருகிறார்.
இதனால் அவருக்கு சற்று கிராக்கி கூடி விட்டது. தமிழ், தெலுங்குக் காரர்கள் அவரைக் கூப்பிட்டால் நான் ரொம்ப பிசி என்கிறாராம். அப்படியும் வலியுறுத்திக் கூப்பிட்டால் பெரிய சம்பளமாக கேட்கிறாராம்.
இதனால் தமிழ் சினிமாக்காரர்கள் ஜெனீலியாவை தவிர்க்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் தெலுங்குக் காரர்கள் விடாப்பிடியாக அவரை அனத்திக் கொண்டிருக்கிறார்களாம்.
இந்த நிலையில் சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்த் தயாரிக்கும் புதிய தெலுங்குப் படத்தில் மிகப் பெரிய சம்பளத்திற்கு ஜெனீலியா ஒப்பந்தமாகியுள்ளாராம்.
தமிழுக்கு இப்போதைக்கு வரும் ஐடியாவில் ஜெனீலியா இல்லை என்று கூறுகிறார்கள்.

ஆந்திராவின் சந்திரகிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நடிகை ரோஜா, தனது வேட்பு மனுவை குலதெய்வ கோயில்களில் வைத்துப் பூஜை செய்தார்.
தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவியான ரோஜா, இந்தத் தேர்தலில் வென்றால் மிக முக்கிய பதவி காத்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இதில் எப்படியாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என தீவிர பிரச்சாரத்தில் குதித்துள்ளார் ரோஜா.
எனவே தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யும் முன், குலதெய்வம் கோயில்களில் வைத்து பூஜை செய்தார் ரோஜா.
சந்திரகிரியில் உள்ள நாகம்மா கோவில், மூலஸ்தானி எல்லம்மா கோவில், ராயலபுரத்தில் உள்ள மாத்தம்மா கோவில்களுக்குச் சென்றார். பின்னர் வேட்பு மனுவை அக்கோவில்களின் கருவறையில் வைத்து பூஜை செய்தார்.
தொண்டர்கள் புடைசூழ வந்த ரோஜாவுக்கு கோவில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.
பின்னர் அவர் சந்திரகிரியில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை நல்ல நேரத்தில் தாக்கல் செய்தார். அவருடன் சந்திரபாபு நாயுடுவின் சகோதரர் ராமமூர்த்தி நாயுடுவும் சென்றிருந்தார்.
வேட்புமனு தாக்கல் முடிந்து வெளியில் வந்த ரோஜா, "இந்தத் தொகுதியில் எனக்கு எதிரான எதிரான பிரச்சாரத்தை முறியடிப்பேன். நிச்சயம் வெற்றி பெறுவேன். தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும்..." என்றார் நிருபர்களிடம்.

தமிழ் சினிமாவில் டிரென்டுகள் மாறி வருகின்றன. ஹீரோக்கள் வில்லன்களாக நடிப்பது ஒரு பக்கம் இருந்தால், இப்போது ஹீரோயின்களும் வில்லத்தனத்தில் வெளுத்துக் கட்டத் தொடங்கியுள்ளனர்.
படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் வில்லத்தனமாக நடித்து பெரும் புகழ் பெற்றதைத் தொடர்ந்து பல்வேறு ஹீரோயின்களுக்கும் படையப்பா நீலாம்பரி கேரக்டர் போல கிடைத்தால் நடிக்கத் தயார் என அவ்வப்போது பேஷனாகி விட்டது.
ஆனால் சிலர்தான் அப்படி வில்லத்தனமாக வந்த கேரக்டர்களை ஏற்று நடித்தனர்.
உயிர் படத்தில் சங்கீதா நெகட்டிவ் ரோலில் கலக்கினார். இந்த நிலையில் சினேகா இப்போது வில்லத்தனம் செய்ய களம் இறங்கி விட்டார்.
தெலுங்கில் அவர் நடித்த தொலிவளப்பு என்ற படத்தில் கிட்டத்தட்ட வில்லத்தனம் கலந்த ஹீரோயின் கேரக்டரில்தான் அவர் நடித்துள்ளார்.
அந்தப் படத்தை தற்போது தமிழில் ஹரி என்ற பெயரில் டப் செய்கின்றனர்.
இதேபோல கோவா படத்திலும் வில்லத்தனம் செய்கிறார் சினேகா. வில்லத்தனமாக இருந்தாலும் இந்த கேரக்டர் வெகுவாக பேசப்படும் என்பதால் கதையைக் கேட்ட மாத்திரத்திலேயே நான்தான் நடிப்பேன் என்று கூறி விட்டாராம் சினேகா.
இந்த வரிசையில், தற்போது முரட்டுக்காளை ரீமேக்கில், சிந்து துலானி வில்லத்தனம் நிறைந்த கேரக்டரில் வருகிறார்.
நம்ம சந்தியாவும் கூட நூற்றுக்கு நூறு ரீமேக் படத்தில் வில்லத்தனமாகத்தான் வருகிறாராம்.
பரவாயில்லை, ஹீரோயின் வாய்ப்பு குறைந்து போனால் வில்லியாகியும் கலக்கலாம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக