செவ்வாய், 30 ஜூன், 2009

2009-06-30

மாமியார் என்ற பெண்

மாமியார் என்ற உறவு பட்டமாக மாறி மருமகளுடன் அதிகாரத்துக்காக போட்டியிடும் நிலை உருவாக்கப்பட்டதால் பெண்ணிய கோணத்தில் மாமியாரும் ஒரு பெண் என்ற அளவில் இந்த விஷயத்தை அலசலாம் என இருக்கிறேன்.

மாமியார் என்பவர் யார்?

மாமியார் என்பவர் ஒரு ஆணின் தாய்.இன்னொரு ஆணின் மனைவி.இந்த இரு வேலைகளையும் செய்து களைத்துபோய், உடல் இளைத்து,நலிந்துபோன ஒரு அடிமை.மருமகளாய் வீட்டுக்கு வந்து அடிமையாய் ரிடையர் ஆன ஒரு பெண்.தான் பெற்ற பிள்ளையை தானே வளர்க்க முன்வராத ஆண்வர்க்கத்தின் சார்பாக குழந்தையை வளர்க்கும் முழுநேர பொறுப்பையும் கையில் எடுத்துக்கொண்டு அந்த சுமை காரணமாக தனது கெரியரை இழந்தவர்.மன்னன் மனைவியானாலும் நம் நாட்டில் ஒரு பெண்ணுக்கும் நடுத்தெருவுக்கும் இடையில் நிற்பது ஒரு ஆண் மட்டுமே...அந்த ஆண் இல்லையென்றால் அந்த பெண் நடுதெருவில் தான் என்ர நிலையில் தான் நாம் நமது பெண்களை வைத்திருக்கிறோம்.அந்த விதியின் கீழ் தாய்,மனைவி என்ற இருசுமைகளை சுமந்து பணிசெய்து இளைத்து, குடும்பத்தின் முதல் அடிமை மாமியார்.

மருமகள் என்பவர் யார்?

மாமியார் எனும் அடிமை ரிடையர் ஆனதால் அவரது பணிகளை செய்ய புது அடிமை தேவைப்படுகிறது.அதனால் கல்யாண சந்தையில் பேரம் பேசி மருமகள் என்ற இன்னொரு அடிமையை கொண்டுவருகின்றனர் ஆண்கள்.மருமகள் என்பவர் ஒரு குடும்பத்தில் மாமியரை ரீப்ளேஸ் செய்யும் அடிமை.

மாமியார் என்பது கவுரவத்துக்குரிய பட்டமா?

ஜெயிலில் சீனியர் கைதிகளை கன்விக்ட் வார்டர் என்ற பதவி கொடுத்து ஜூனியர் கைதிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்துவார்கள்.அந்த பொறுப்புக்கு பரிசாக அந்த கன்விக்ட் வார்டருக்கு கிடைக்கும் சலுகைகள் கால் காசுக்கு பெறாத கான்விக்ட் வார்டர் என்ற பட்டம்.மற்ற கைதிகளை விட நல்ல உணவு.நல்ல ஜெயில் அறை.சூபரெண்டிடம் மதிப்பு...இதுமாதிரி அலங்கார பட்டம் தான் மாமியார் என்ற பட்டமும்.குடும்பத்துக்கு வந்த ஜூனியர் அடிமைகளை மேற்பார்வை செய்யும் சீனியர் அடிமை மாமியார்.

மாமியார் மருமகள் சண்டை ஏன்?

ஆங்கிலத்தில் zero sum game என்று சொல்வார்கள்..மாமியாரின் நலன் மருமகளை ஒடுக்குவதில் தான் இருக்கிறது என்பது போல் ஆக்கப்பட்டதால் மாமியார்,மருமகள் இருவரும் கிடைக்கும் கால்காசு அதிகாரத்துக்கும்,அந்தஸ்துக்கும் போட்டியிட வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள்.கோழிப்பண்னையில் கோழிகளை கூண்டில் அடைத்துவிட்டு உணவை வீசினால் கோழிகள் உணவுக்காக அடித்துக்கொள்ளத்தான் செய்யும்.இல்லத்திலும் நிலைமை அதுதான்.

மாமியாரும், மருமகளும் ஒரே குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட இரு பெண்கள்.அந்த முறையில் அவர்களுக்கிடையே இரு பெண்களுக்கிடையே நிலவும் இயல்பான சகோதரபாசம் மறைந்து அவர்கள் எதிரிகளானதற்கான காரணம் முழுக்க இந்த ஆணாதிக்க சமூகத்தின் வடிவமைப்பாலேயே நிகழ்ந்தது.

கணவனின் வயதான பெற்றோரை பார்த்துக்கொள்வது மருமகளின் கடமை ஆகாதா?

இல்லை.ஆணாதிக்க உலகில் பெண்களிடம் சுமத்தப்ப்டும் இப்படிப்பட்ட மருமகள் கடமை, தாயின் கடமை ஆகிய அனைத்தும் ஆண்கள் தமது பொறுப்பை தட்டிகழித்துவிட்டு பெண்களை அடிமைப்படுத்த செய்யும் சூழ்ச்சியே ஆகும்.தனது குழந்தையை தான் கவனிக்கும் கடமையை தட்டிகழித்து மனைவியின் தலையில் அதை கட்ட தாய்மை என்ற பொறுப்பு பெண்களின் தலையில் கட்டப்படுகிறது.அதேபோல் தனது பெற்றோரை தான் தான் கவனித்துகொள்லவேண்டும் என்ற ஆணின் கடமை மனைவியின் தலையில் கட்ட மருமகள் என்ற இன்னொரு கடமை பெண்ணின் தலையில் கட்டப்படுகிறது.

இப்படி ஆணின் வேலையை பெண் செய்வதால் அவளது career அழிந்து ஆணை சார்ந்திருக்க வேண்டியவளாகிறாள்.இத்தகைய சார்ந்திருத்தல் ஆணின் பலத்தை அதிகரித்து பெண்ணை நிரந்தர அடிமையாக்குகிறது.

இதற்கான தீர்வு என்ன?

பெண்னை பெண்ணாக வளர்ப்பதும், ஆணை ஆணாக வளர்ப்பதும் ஒழியவேண்டும்.ஆண் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே சமையல் கற்றுதரவேண்டும்.வீட்டுவேலைகள் அனைத்தும் செய்ய அவர்கள் பழக்கப்படுத்தப்படவேண்டும்.பெண் குழந்தைகளை மட்டும் இதை செய்ய வைத்துவிட்டு ஆண்குழந்தைகளை கிரிக்கட் ஆட அனுப்பும் போக்கு ஒழியவேண்டும்.

ஆணாதிக்கம் ஒழிய பெண் ஆணைப்போல் வேலை,கெரியர் என்ற கண்ணோட்டத்தில் வளர்க்கப்டுவதும், ஆண்கள் பெண்களைபோல் குடும்ப பொறுப்பை ஏற்று நடத்தும் விதத்திலும் வலர்க்கபடவேண்டியது முக்கியமாகிறது.தனது வீட்டின் வேலைகள் எதுவாக இருந்தாலும் அதை கணவனும், மனைவியும் பக்ரிந்து செய்யவேண்டும்.துணி துவைப்பது,பாத்திரம் கழுவுவது ஆகியவை அசிங்கமல்ல,ஆண்மைக்கு இழுக்கல்ல என்பதை ஆண்கள் உணரவேண்டும்.அடிமைகளை மேலும், மேலும் உருவாக்கும் கூட்டுகுடும்பமுறை ஒழிந்து காதல்மணங்களும், தனிகுடித்தனங்களும் பெருகவேண்டும்.

இவை எல்லாம் இந்த ஜென்மத்தில் நடக்காது என்பது யதார்த்தம் என்றாலும் ஒரு விஷயம் இருக்கவேண்டியது இப்படித்தான் என்பதையாவது உலகம் அறிந்தால் நன்று:-)

இனம் என்றால் என்ன என்று யோசித்தால் உடனடியாக சாதி தான் நினைவுக்கு வருகிறது.என்னதான் சாதியை ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று வீராப்பு பேசினாலும் இனத்தை பற்றி பேசினால் ஒரு கட்டத்தில் சாதியை பற்றி பேசித்தான் ஆகவேண்டும்.தற்கால படித்த தமிழ் சமூகத்தில் சாதியின் கட்டுமானமும் வீரியமும் குறைந்துவிட்டது.கலப்பு திருமணங்களும், காதல் மணங்களும்,தமிழ் சினிமாவும், பத்திரிக்கைகளும், நகர்மயமாக்கலும் சாதியின் வீச்சை நகர்புறத்தில் பெருமளவு குறைத்துவிட்டன என்கிறார்கள்.அதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம்.

கொங்குநாட்டில் வேளாண்மை செய்துவாழ்ந்த குடிகளின் கலாசாரம் காலபோக்கில் கொங்கு மண்ணின் கலாசாரமாக மாறியது.கொங்கு நாட்டில் வேளாண்மை செய்து வந்த குடிகள் நாள்போக்கில் கொங்கு வெள்ளாளர் என்ற சாதியாக உருவெடுத்தனர்.குறும்பாடுகளை மேய்த்து வந்தவர்கள் குறும்பர் எனும் சாதியாக உருவெடுத்தனர்.குடியானவன் வீட்டுக்கு விருந்தினராக போனால் கவனிப்புக்கு சொல்லவா வேண்டும்?விதவிதமான காய்கறிகள்,அறுசுவை உணவு என்று படைத்து அசத்திவிட மாட்டார்களா?இந்த கவனிப்புதான் நாள்போக்கில் விருந்தோம்பல் என்ற கலாசாரமாக உருவெடுத்தது.இன்றைக்கும் கொங்கு நாட்டு கவுண்டர் வீட்டுக்கு போனால் சாப்பிடாமல் விடவே மாட்டார்கள்.

குடியானவர் கொண்டாடிய பொங்கல் பண்டிகை நாள்போக்கில் அனைவரும் கொண்டாடும் பண்டிகையானது.இருந்தாலும் விவசாயிகள் வீட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடும் அளவுக்கு சிறப்பாக மற்றவர்களால் கொண்டாடவே முடியாது.

தமிழ் குடி சாதிகளாக நாள்போக்கில் உருவெடுத்தபோது தமிழ் கலாசாரம் சாதிகளால் தான் பாதுகாக்கப்பட்டது.கும்பிடும் சாமி,சாப்பிடும் உணவு,அணியும் உடை,செய்யும் தொழில் என்று அனைத்தையும் சாதி கட்டுமானம் கட்டுகுலையாமல் காத்து வந்தது.கலாசாரம் என்பது மேலே சொன்ன அனைத்தின் கூட்டுகலவை தான். சாதி கட்டுமானம் குலைந்தபோது முதலில் மாறியது கலாசாரம் தான்.சாதி அழிய அழிய உணவு,உடை,தொழில்,கலாசாரம் என்று அனைத்தும் மாறிவிட்டது.

குனிந்த தலை நிமிராமல்,தகப்பனும் தாயும் கைகாட்டிய அத்தைமகனை மட்டுமே மனந்து பழகிய தமிழ்பெண் என்று டம்பபையை தோளில் மாட்டிக்கொண்டு வேலைக்கு போய் தெருவில் எதிர்ப்படும் அன்னிய ஆணை கண்டு காதல் கொண்டாளோ அன்றே தமிழ்நாட்டில் சாதிகளின் சமத்துவத்துக்கு அல்லது சாதி அழிப்புக்கு சாவுமணி அடிக்கப்பட்டுவிட்டது.தமிழ் கலாசாரமும் அன்றுமுதல் அடியோடு மாறிவிட்டது.உண்மையில் நாம் இதற்காக வருந்துவதை விட மகிழ்ச்சி அடையவேண்டிய காரணங்கள் தான் அதிகம்.

சாதி என்பது கெட்ட வார்த்தை என்கிறவர்கள் கூட ஒரு கட்டத்தில் ஜாதியில் சரணடையத்தான் வேண்டியிருக்கிறது.சரி..சாதியை ஒதுக்கி விட்டு தமிழினத்துக்கு வருவோம்..தமிழினம் என்பது என்ன?பல சாதிகளின் கட்டுமானம் தான் தமிழினம்.இனம் என்பது பிறப்பால் வருவது தான். கவுண்டர், தேவர், வன்னியர், முதலியார், தேவேந்திரர் குலத்தவர், நாடார் போன்ற சாதிகளில் பிறந்தால் ஒருத்தர் பச்சை தமிழராகிறார். ஒக்கலிகர்,நாயக்கர்,ரெட்டி,அருந்ததியர்,மேனன்,நாயர் ஆகிய சாதிகளில் பிறந்தால் வளர்ப்பு தமிழராகிறார் (நன்றி:பாரதிராஜா).வீராமாமுனிவர், ஜார்ஜ் ஹார்ட், எம்ஜிஆர் மாதிரி கவுரவ தமிழர்களும் (கவுரவ டாக்டர் மாதிரி) உண்டு. கலப்பு திருமணம் செய்யும் பிள்ளைகள் தந்தையின் சாதியை அடைகின்றன.

தமிழ் கலாசாரம் என்பது இந்த சாதிகளின் கலாசாரம் தான். சாதிகலாசாரத்தை ஒதுக்கிவிட்டு தமிழ் கலாசாரத்தை ஏற்பது என்பது எத்தனை தூரம் சாத்தியம் என்பது கேள்விக்குறிதான்.இருந்தாலும் அப்படிப்பட்ட பலரை நான் சந்தித்திருக்கிறேன். இவர்கள் தமிழ் செல்வன், நெடுஞ்செழியன் என்கிற மாதிரி பொதுவான பெயர்களை வைத்துக்கொள்வார்கள். தமிழினம், தனித்தமிழ் போன்ற கோட்பாடுகளில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்.இவர்களது சாதிமறுப்பு சின்சியரானது.இருந்தாலும் இவர்களது கலாசாரம் தான் உண்மையான தமிழ் கலாசாரம் என்பதை என்னால் ஏற்கமுடியவில்லை.இவர்கள் தமிழ்நாட்டின் மையநீரோட்டத்தை விட்டு விலகியவர்களாக்வே எனக்கு தென்படுகிறார்கள்.நமது வசதிக்காக இவர்களை தமிழ் செல்வன் க்ரூப் என்று வைத்துக்கொள்வோம்.

கலாசார அடையாளத்தை முற்றிலும் துறந்த ஒரு கும்பல் தமிழ்நாட்டில் உலா வருகிறது.இவர்கள் பெயரை வைத்து இவர்கள் என்ன தேசம் என்று வேண்டுமானால் கண்டுபிடிக்கலாமே ஒழிய என்ன இனம், மொழி, சாதி என்பதை கண்டுபிடிக்கவே முடியாது.விஷால்,ராஜ்,ப்ரீதி,ப்ரியங்கா,அநிருத் என்கிற மாதிரி இவர்கள் பெயர் இருக்கும்.சர்வதேச மொழியை தான் பேசுவார்கள்.சர்வதேச தொலைகாட்சி சேனல்களை தான் பார்ப்பார்கள்.இப்போது தொலைகாட்சி பார்ப்பது கூட ஒழிந்து இவர்களிடையே இணையம் பிரபலமாகி வருகிறது.நமது வசதிக்காக இவர்களை விஷால் க்ரூப் என்று வைத்துக்கொள்வோம்.

தமிழ் செல்வன் க்ரூப்புக்கும், விஷால் க்ரூப்புக்கும் இடையே இருக்கும் பொதுவான ஒற்றுமை இவர்கள் மையநீரோட்டத்தை விட்டு விலகியிருப்பதே ஆகும்.இவர்கள் இருவரும் மைய நீரோட்டத்தை பல காரணங்களால் வெறுப்பவர்கள்.தமிழ் செல்வன் க்ரூப் மைய நீரோட்டதை தனக்த்தே கொண்டுவர முயற்சித்து தோல்வி அடைந்துவிட்டது.அதனால் அவர்களுக்கு மைய நீரோட்டத்தின் மேல் கோபம் அதிகம். விஷால் க்ரூப்புக்கு மைய நீரோட்டத்தில் இருப்பவர்கள் பட்டிக்காட்டான்கள் என்ற நினைப்பு.அதனால் அவர்கள் மையநீரோட்டத்தை விட்டு விலகி இருத்தல் மட்டுமின்றி பல சமயங்களில் அதை எதிர்த்தே செல்வார்கள்.உதாரணத்துக்கு பொதுசனம் ரசிக்கும் நாவல்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை இவர்களுக்கு பிடிக்காது.மாற்று மொழி படம் தான் பார்ப்பேன்,தமிழ் படம் பார்த்ததே கிடையாது என சத்தியம் செய்வார்கள்.பொது இடங்களீல் தமக்குள் தமிழில் பேசிக்கொள்ளவே மாட்டார்கள்.ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள்.பொதுமக்களின் மனோபவாத்தை பொதுபுத்தி என்பார்கள்.தமக்கு அந்த மனோபாவமே வரகூடாது என்று சொல்லி தள்ளி நிற்பார்கள்.

தனித்தமிழ்,இன அடையாளம், ஆங்கில வழிக்கல்வி போன்ற பல விஷயங்களில் தமிழ் செல்வன் கும்பலுக்கும் விஷால் கும்பலுக்கும் இடையே அடிக்கடி மோதல் வருகிறது.ஒரு விதத்தில் இது காலம் காலமாக நடக்கும் மோதல் தான்.1940,30களில் தமிழ் சமூகம் குடுமி வைத்திருந்தது.பிரிட்டிஷ்காரனை பார்த்து அப்போதைய விஷால் க்ரூப் கிராப்பு வைக்க ஆரம்பித்தது.அப்போது கிரபபு வைத்தவனை எல்லோரும் கிண்டல் செய்வார்கள்.கொஞ்ச நாள் கழித்து கிராப்பு வைத்தவன் எண்ணீக்கை அதிகமாகி அவர்கள் எல்லோரும் சேர்ந்து குடுமி வைத்தவர்களை கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள்.கடைசியில் கிராப்பு வென்று குடுமி ஒழிந்தது.

இந்த சண்டை அடுத்து வேட்டி வெர்சஸ் பேண்ட் என்பதாக மாறி அதில் விஷால் க்ரூப் கடைசியில் ஜெயித்து விட்டது.இன்று தமிழ் செல்வன் க்ரூப்பும்,விஷால் க்ரூப்பும் இருவருமே வேட்டி அணீவதில்லை.மைய நீரோட்டத்தில் இருப்பவன் தான் வேட்டி அணிகிறான்.

இப்படி பல தளங்களில் இந்த இரு க்ரூப்புகளும் மோதியே வந்துள்ளன.எந்த சமூகத்திலும் மைய சமூகம் எந்த க்ரூப்பை ஆதரிக்குமோ அதுதான் இறுதியில் வெல்லும்.வரலாறு வெற்றிபெற்றவர்களால் எழுதப்படுவதுதான்.தமிழகத்தில் தற்போது மையநீரோட்டத்தில் இருக்கும் சமூகம் விஷால் க்ரூப்பின் பக்கம் திரும்பியிருப்பதாக தான் படுகிறது.விஷால் க்ரூப்பில் சேரத்தான் மையநீரோட்டத்தில் இருக்கும் சமூகம் ஆசைப்படுகிறது.கணிணீதொழில் புரட்சியும், கான்வென்டு கல்வியும் இந்த ஆசையை நிறைவேற்றுவதில் பெரும்பங்கு வகித்தன. "மொழி அழிகிறது, கலாசாரம் அழிகிறது" என்று தமிழ் செல்வன் க்ரூப் புலம்புவதெல்லாம் இந்த போரின் பின்விளைவுதான்.



காலச்சக்கரங்களை கட்டிக்கொண்டு
ஒருவழிப்பாதையில் விரைகிறது வாழ்க்கை

திசைமரமோ வழிகாட்டியோ
இல்லாத கணங்கள் பயம்நிறைந்ததாய் இருக்கின்றன
வேறு சாத்தியக்கூறுகளற்று பாதையின் போக்கிலேயே
போவதை துணிவென்று அறிவிக்கிறேன்

வனப்புமிகுந்த சோலைகளை தாண்டித்தான்
செல்கிறேன்ற போதிலும்
எதற்காகவும் நிற்பதாயில்லை
மீண்டும் அவற்றை கடக்க நேரிடுமென்றும்
நிதானிக்க நேரமில்லையென்றும்
சொல்லிக்கொள்ளலாம்

நினைவிலிருத்திக் கொள்ளமுடிந்தவைகளை
பயணத்தின் முடிவில் கட்டாயம்
குறித்து வைப்பதாய் முடிவு

இக்கணம் வரை
சேரப்போகும் முகவரி இதென்பதை மட்டுந்தான்
சர்வநிச்சயமாய் சொல்ல முடியவில்லை
ஒவ்வொரு நாளும் ஏதோவொரு இடத்தில் யாரேனும் ஒருவர் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகிக்கொண்டே தானிருக்கிறார்கள். 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பது வெறும் சொற்களில் மட்டுமே இருக்கிறது. எத்தனை தூரம் நாகரீகம் வளர்ந்திருந்தாலும் இன்னும் சகமனிதனை ஒரு உயிராய் கூட மதிக்க தெரியாதவர்கள் நிறைந்த உலகத்தில்,வாழ்வது கூட ஒரு பெரும் சாதனையாகத்தான் ஆகிவிடக்கூடும். சொல்வதற்கு புதிதாக ஏதுமில்லை, அல்லது அதற்கு மனம் ஒப்பவில்லை. அடுத்த தலைமுறைக்காவது மனித்தை கற்றுத்தர வேண்டிய கடமை நமக்கு பெரிதாக இருக்கிறது என்று ஒன்றை மட்டும் என்னால் சர்வ நிச்சயமாக சொல்ல முடியும். இப்போதைக்கு இனவெறி தாக்குதல்களுக்கு ஆளாகும் ஒவ்வொருக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்.



மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே!
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே!

வழிகின்ற தண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே

காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை
மனதோடு மனம் சேரட்டும்!

மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமிங்கு பகைக் கொள்வதேனோ?
மதம் என்னும் மதம் ஓயட்டும்...!
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்..!!

துளியெல்லாம் கைகோர்த்து கடலாகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
துகளலெல்லாம் ஒன்றாகி மலையாகட்டும்
விண்ணோடு விண் சேரட்டும்

விடியாத இரவென்றும் வானில் இல்லை
ஒலியோடு ஒலி சேரட்டும்
விஜய் தொலைகாட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒரு வழியாக ஒரு வருடத்திற்கு பிறகு போன வாரம் முடிந்தது. போன முறை இறுதிகட்டத்தில் விமர்சனங்கள் வந்தன. ஆனால் இம்முறை ஆரம்பம் முதலே நிறைய விமர்சனங்கள். ஒரு சாராருக்கு மட்டுமே தான் வாய்ப்புகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குழு மனப்பாண்மை மனிதனின் ஆதி குணம். குகைகளில் வாழ்ந்த காலத்திலேயே தனக்கென்று ஒரு கூட்டத்தை அமைத்துக்கொண்டு அதனோடே வாழ்ந்து பழகியவர்கள். இன்னமும் அதன் பாதிப்பு பெரியளவு இருக்கவே செய்கிறது. இனப்பற்று என்பது நல்லது தான். ஆனால் அடுத்தவருக்கு தீங்கிழைக்காத வரை. அடுத்தவருக்கு துரோகம் இழைக்கப்படுகையில் ஒருவருக்கு பற்றுதலாக தோன்றுவது அடுத்தவருக்கு வெறியாகவும் அயோக்கியத்தனமாகவும் தோன்றலாம்

வேற்றுமொழி சுற்றுகள் இடம்பெற்ற போது அந்த மொழிகளுக்கான உச்சரிப்பில் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் தமிழ் உச்சரிப்பை பற்றி பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. உள்ளூரில் தமிழனுக்கு எப்போதும் மரியாதை குறைவாகவே கிடைக்கிறது.

அடுத்து இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்காக நடத்தப்படவுள்ளது. ஏற்கனவே போட்டி நிறைந்த உலகம் என்று சொல்லி சிறு வயதிலேயே பிள்ளைகளுக்கு அழுத்தத்தை உண்டாக்க துவங்கிவிட்டார்கள். தோல்வியுறும் போதெல்லாம் கதறி அழும் குழந்தைகளை காண்கையில் மனம் கலங்குகிறது. அவர்களை தோல்வியுறுவதை காட்டிலும், இந்த சின்ன தோல்விக்கே மனம் துவண்டால் பின்னாளில் இவர்கள் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற நினைக்கையில் பதற்றமாய் இருக்கிறது

நாள்தோறும் இப்படியான நிகழ்ச்சிகள் தொலைகாட்சிகளிலும், பள்ளி கல்லூரி வளாங்களிலும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. நாளை நம் வீட்டு பிள்ளைகளும் இம்மாதிரி போட்டிகளில் கலந்து கொள்ளலாம். ஏதோ ஒரு முட்டாள்தனமான காரணத்திற்காகவோ அல்லது நடுவரின் இனவெறியினாலோ அவர்கள் வெளியேற்றப்பட்டால் அவர்கள் நிலை என்னவாக இருக்கும்? உண்மையாகவே அவர்கள் தோல்வியுற்றாலும் அதனை எப்படி எடுத்துக்கொள்ள போகிறார்கள்? அந்த நிலையை எதிர்கொள்ளும் விதத்தை அவர்களுக்கு எடுத்துரைக்க நமக்கு பக்குவம் இருக்கிறதா?

கருத்துகள் இல்லை: