திங்கள், 22 ஜூன், 2009

2009-06-22

கவிஞர் தாமரையின் கவிதைச் "சாபம்" சில அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத் தமிழர்களில் பலர்(சிலர்?) கடந்த சில மாதங்களில் தமது தேசம் பற்றிய தீர்மானமான மறுபரிசீலனையை செய்யத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். அவர்களுக்கு இந்தச் சாபம் ஒரு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் இந்திய தேசியத்தில் நம்பிக்கை கொண்ட பலருக்கு இது மிகப்பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கும் என்பதை மிக எளிதில் உணர்ந்து கொள்ளலாம். பலர் வஞ்சினத்துடன் கவிஞர் தாமரையின் கவிதையை எதிர்கொள்கிறார்கள்.

எங்கள் ஊருக்கு அருகில் கோபக்கார சாமிகளுக்கான கோயில்கள் உள்ளன. காளி கோயில், கட்டெறும்பு அய்யனார் கோயில் என்று. ஒருவருக்கு அநீதி நேர்ந்து, எதிராளியை தட்டிக்கேட்க, அவருக்காக நீதி கேட்க, யாருமில்லை என்ற பட்சத்தில் அவர் அந்த கோயில்களுக்குச் சென்று "படி கட்டி" அல்லது "காசை வெட்டி" நீதி கேட்பார். இந்த சக்தி வாய்ந்த சாமிகள் மிகப் பெரிய தண்டனையை எதிரிக்கு வழங்கும் என்பது மக்களது தீவிர நம்பிக்கை. எனக்கு இறை நம்பிக்கை எதுவும் இல்லை. ஆனால் கடந்த மாதங்களில் ஏற்பட்ட தாங்க இயலாத ஆற்றாமையில், அந்த கோயிலுக்குச் சென்று "படி கட்டினால்" தான் என்ன என்று தோன்றியது. நான் கட்டும் படி யாரிடமும் சென்று நீதியை நிலை நாட்டப்போவதில்லை என்று தெரிந்தாலும், "நான் படி கட்டிட்டேன்" என்று எல்லோரிடமும் சொல்வதற்காகவாவது அப்படிச் செய்திருக்கலாம். தெருச்சண்டையில் வீழ்த்தப்பட்ட தாய்மார்கள் மண்ணை வாரி இறைத்து "நீ நாசமாப் போவ" என்பார்களே, அது போல!

தமது சாபத்தால் உண்மையிலேயே நதிகளெல்லாம் வற்றி, கழனிகளெல்லாம் கருகி மக்கள் பசியில் மடிய வேண்டும் என்பதற்காக விடப்பட்ட சாபமல்ல அது. "தாயே" என்று பாசமுடன் அழைத்த அந்த தேசத்தை தான் எப்படி இழக்கிறேன், அந்த தேசத்தின் துரோகத்தை எப்படிச் சாடுகிறேன் என்பது தான் அக்கவிதை. தந்தையால் தொடர்ந்து பாலியல் பலவந்தம் செய்யப்பட்ட ஒரு பெண் குழந்தைக்கு வளர்ந்து விவரம் தெரிய வரும் பொழுது அதுவரை அவளது தந்தை மீது வைத்திருந்து பாசமெல்லாம் வஞ்சினமாக மாறுமே அது போன்றதொரு கோபம்.

எவ்வளவு நடந்த பொழுதும் ஒரு சில தமிழரைத் தவிர பிற இந்தியர் எல்லோரும் எதுவுமே நடக்காதது போலவே இருந்தார்கள். இன்னும் சிலர் கோலாகலமாகக் கொண்டாடினார்கள். அவர்களுக்கெல்லாம் இக்கவிதை மிக அதிர்ச்சி தரும். இது போன்று எழுதுமளவிற்கு யார் இவர்களுக்கு சுதந்திரம் கொடுத்தார்கள் என கர்ஜிப்பார்கள். இப்படி எழுதியவர்களை தடாவிலோ பொடாவிலோ போடவேண்டும் என்பார்கள்.ஆனால் ஒரு நொடிக்கு "எது இவளை இவ்வளவு கோபமான நிலைக்குத் தள்ளியிருக்கும்" என நினைத்தார்களென்றால் அது போதும்.

இந்தக்கவிதையை தமிழர்களைவிட பிற மொழி பேசுபவர்கள் படிக்கவேண்டும். அவர்களுக்கு இது இன்னும் அதிர்ச்சியாக இருக்கும். சில நேரங்களில் அதிர்ச்சி வைத்தியங்களும் தேவைப்படுகின்றனவே. அதற்காக என்னால் இயன்ற அளவிற்கு இந்தக் கவிதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளேன். முடிந்தால் தமிழ் பேசாத பிற இந்திய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


மிழ் திரையுலகில் இளையதளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய்க்கு இன்று 36-வது பிறந்தநாள். இந்த பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் கல்விப் பயிற்சி மையங்களைத் திறக்கப் போவதாக அறிவித்துள்ளார் விஜய்.

அடுத்த ஆண்டு தான் ஆரம்பிக்கவிருக்கும் அரசியல் இயக்கத்துக்கு அச்சாரமாக இந்த நற்பணிகளைச் செய்யவிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இன்றைய பிறந்த நாள் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மற்றும் சாலிகிராமம் அருணாச்சலா சாலையில் இரு கம்ப்யூட்டர் மையங்களைத் திறந்து வைத்தார் விஜய். இவை தவிர தமிழகம் முழுவதிலும் இது போன்ற கல்வி மையங்களைத் திறக்கவிருப்பதாகவும் கூறினார் விஜய்.

பின்னர் வடபழனியில் உள்ள அவரது ஜே.எஸ்.கல்யாண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாம்களை விஜய் தொடங்கி வைத்தார். 10-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் முகாமில் பங்கேற்று சிகிச்சை அளித்தனர். விழாவில் 100 ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர்.

பிறந்த நாளையொட்டி ரசிகர்களைச் சந்தித்த விஜய் பல்வேறு உதவிகளை வழங்கினார். வடபழனி முருகன் கோயில் அருகில் ஏராளமான ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார்.

லிட்டில் பிளவர் பள்ளி, மெர்சி ஹோம், ஸ்மாஸ்டிக்சொசைட்டி போன்றவற்றில் விஜய் மதிய உணவு வழங்கினார்.

வடபழனி, கோடம்பாக்கம், சாலிகிராமம் முழுக்க விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியும், 'நாளைய முதல்வர் விஜய்''(?!) என வர்ணித்தும் பேனர்கள், விஜய் மன்ற கொடிகள் மற்றும் போஸ்டர்கள் மயமாகவே இருந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் மற்றும் ரசிகர் மன்றத்தினர் செய்திருந்தனர்.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். அவர்களுக்கு தனது கல்யாண மண்டப பால்கனியில் நின்றபடி டாட்டா காட்டினார் விஜய்!

Justify Full

சேலத்தில் நடைபெற்ற ம.தி.மு.க செயற்குழு கூட்டத்தில் உரையாற்றும் பொழுது மதிமுக வை அழிக்க எவராலும் முடியாது என்று வைகோ கூறியுள்ளார். சேலம் மாவட்ட ம.தி.மு.க. செயல்வீரர் கூட்டம் சேலம் ஜங்சன் அருகில் உள்ள பி.சி.சி. திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் கு.சீ.வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தாமரைக்கண்ணன் வர வேற்றார்.

ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சிறப்பு ரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

ம.தி.மு.கவை அழிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் கருணாநிதி இன்றுவரை ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரியும். ம.தி.மு.க. அழிக்க சேலத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்க வில்லை. எங்களை அழிக்க நினைத்த கருணாநிதி தோற்றுப்போனார். ஆனால் எந்த ஒரு காலகட்டத்திலும் அ.தி.மு.க. எங்களை அழிக்க நினைக்கவில்லை. ம.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் என்னை தோற்கடிக்க ரூ.50கோடி தேவைப்பட்டு இருக்கிறது. 11ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்று இருக்கிறோம். கவுரவமான தோல்வியைத்தான் நாங்கள் பெற்று இருக்கிறோம்.

நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம் என்று வருத்தப்படவில்லை. புலிகள் தோற்று விட்டார்களே என்ற கவலைத்தான் இருந்தது. அவர்கள் தொடர்ந்து யுத்தத்தை தொடர்ந்து நடத்துவார்கள். பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார். புலிகளை அழிக்க முடியாது.
.
உள்ளத்தில் உறுதியுடனும், லட்சியத்தில் உறுதியுடனும் இருந்து தொடர்ந்து போராடுவோம்.

12 தொகுதிகளில் அ.தி. மு.க. வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க.பெற்ற ஓட்டுக்களை விட அ.தி.மு.க. அதிகம் பெற்று இருக்கிறது. வரும் பொது தேர்தலில் எத்தனை கோடி கொடுத்தாலும் அ.தி.மு.க. அணி வெற்றிபெறும். தேர்தலில் பணநாயகம் நடந்ததால் தி.மு.க. வெற்றி பெற்றது. வரும் தேர்தலில் இது நடக்காது.

நம் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அதற்காக நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம். மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது அவ நம்பிக்கை ஏற்பட்டு விடக்கூடாது. இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கிராமங்கள் தோறும் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். தமிழர்களின் வாழ்வுரி மைக்காகவும், ஈழ பிரச்சினை தீரவும் போராடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தீர்மானங்களும் நிறைவேறியது. இதன் விவரம் வருமாறு:-

நடந்து முடிந்த பாராளு மன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த தமிழக வாக்காள பெருமக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

இலங்கை தமிழர்கள் அழிக்கப்பட்டு, கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்து கொண்டு தமிழக மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் மத்திய, மாநில அரசுகளை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வுகளை உதவி செய்ய ஐ.நா. மன்றத்தையும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மா னங்கள் நிறைவேறியது.

கூட்டத்தில் மாநில பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, துணை பொதுசெயலாளர் மல்லை சத்யா, தொழிற்சங்க தலைவர் திருப்பூர் துரைசாமி, தேர்தல் பணி செயலாளர் மனோகரன், சேலம் நகர பொறுப்பாளர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் கோபால்ராஜ், சேலம் மாவட்ட தொழிற்சங்க தலைவர் ஆன்டனி ஜார்ஜ், ஒன்றிய செயலாளர்கள் பன்னீர்செல்வம், பூபதி, மணி, நல்லத்தம்பி, வாசுதேவன், ஜெயவேலு, ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் 50பேர் ஆனந்தராஜ் தலைமையில் வைகோ முன்னிலையில் ம.தி.முகவில் இணைந்தனர். இவர்களுக்கு வைகோ சால்வை அணிவித்து வாழ்த்து கூறினார்.


விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் தடையை விலக்க வேண்டும். இல்லாத இயக்கம் என்று அறிவித்துவிட்ட பிறகு புலிகளை தடைசெய்வதில் என்ன நியாயம் இருக்கிறது என்றார் இயக்குனர் சீமான்.

கோவை புலியகுளத்தில் தமிழர் உரிமை முன்னணி சார்பில் ஈழ ஆதரவாளர் மாநாடு, பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இயக்குனர் சீமான் பேசியதாவது:

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்திருந்தாலும், அந்த மக்கள் தனி ஈழம் கேட்டுப் போராட உரிமை தந்திருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அதற்குக் கூட உரிமையில்லை. எமது இன மக்கள் அங்கே பல்லாயிரக்கணக்கில் செத்து மடிவதை எதிர்த்துக் குரல் கொடுத்தால் சிறையில் அடைக்கிறார்கள். ஈழ மக்கள் விடுதலைக்காக குரல் கொடுக்க ஒரு இயக்கம் காண்பதைக் கூட இந்த அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்க அவுஸ்திரேலியா அரசு மறுத்து விட்டது. இலங்கையில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று சொல்கிறார்கள். அப்படியிருக்கும் போது இல்லாத இயக்கத்துக்கு எதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசை அவுஸ்திரேலிய அரசு கேட்கிறது. அவுஸ்திரேலியாவின் இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இதையேதான் இப்போது நாங்களும் கேட்கிறோம்... இல்லாத இயக்கத்துக்கு தடை எதற்கு இந்தியாவில்?

இன்றைக்கு பிரபாகரன் குறித்தும், புலிகள் குறித்தும் பல வித கேள்விகள் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும், என்றார் சீமான்.

கொளத்தூர் மணி தலைமை தாங்கி பேசியதாவது:-

பெரியார் திராவிடர் கழகத்தை தடை செய்யப்போவதாக தகவல்கள் வருகின்றன. அப்படி தடை செய்யப்பட்டால் நாம் வேறு பெயரில் இயக்கம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது அந்த இயக்கத்திற்கு என்ன பெயர் வைப்பது? அதை அரசே முடிவு செய்யட்டும்.

தமிழ் ஈழ பிரச்சினை தற்காலிகமாக ஓய்ந்து இருக்கிறது. பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? இலங்கையில் தொடர்ந்து போர் நடக்குமா? என்ற கருத்துக்கள் நிலவுகிறது. ராஜபக்ச இன்னும் ஒரு இலட்சம் சிங்களவர்களை இராணுவத்தில் சேர்ப்பது என்று கூறுகிறார். அப்படி என்றால் அங்கு போர் தொடரும் என்று தானே அர்த்தம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் இலங்கையில் உயிரிழந்த ஈழ தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

  இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை  தீவிரவாத இயக்கம் எனவும், அந்த அமைப்புக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதாகவும் இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த சில நாள்களாக மேற்கு வங்கத்தின் சில மாவட்டங்களில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பொலிஸாரும் துணை இராணுவப் படையினரும் தீவிரப்படுத்தியுள்ளனர். இருதரப்பினருக்கும் இடையேயான மோதலால், அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதனிடையே, தங்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி 5 மாநிலங்களில் 48 மணி நேர முழு அடைப்புக்கு மாவோயிஸ்டுகள் அழைப்பு [...]
  ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அந்நாட்டின் முன்னாள் அரசு அதிகாரி ஒருவருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. 1994 ஆம் ஆண்டு அங்கு நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பில் அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டடுள்ளது. தண்டனை வழங்கப்பட்டுள்ள காலிக்ஸ்டே கலிமன்ஜிரா அந்நாட்டில் உள்துறை இணையமைச்சராக முன்னர் இருந்தவர். அங்கு ஆயிரக்கணக்கான டூட்ஸி இன மக்கள் கொலை செய்யப்பட்டதில் அவருக்கு நேரடி தொடர்பிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். கொல்லப்பட்டவர்களில் சிலரை இவரே அடித்துக் கொன்றதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. மேலும் நாட்டின் தென் பகுதி [...]

கருத்துகள் இல்லை: