கோடுகளால் செய்யப்பட்ட
இதயச் சுவர்களுக்குள்
குருதியின் நிறம்
இருளாக இருந்தது
கொஞ்சம் கோடுகளை
இரவலாக கேட்டேன்
சில ஓவியங்களாக
மாற்றி விடலாமே என்று
உரிமை உடையவன்
முறைத்துப் பார்த்தான்
கண்களிலும் கூடக்
காணவில்லை கருநீலத்தை
போவென அதட்டிய
விரலிடுக்குகள் முழுவதிலும்
அங்கங்கே
முளைத்திருந்தன முட்புதர்கள்
கற்பனை என்றுதான்
முதலில் நினைத்தேன்-அவன்
கடித்துத் துப்பிய
வார்த்தைகளின் எச்சில்
முனைகளிலிருந்து
வரிசையாய் உதிர்ந்தன
சிறுசிறு கூர் முட்கள்
வருத்தமாய் இருந்தாலும்
ஓவியக்கோடுகளை
வாங்க முடியவில்லை
என்றாலும் கொப்பளித்தது
இரக்கம்
இவன் போலவே இன்றைய
உலகமும்
மெதுமெதுவாய் மாறுவது
குறித்து!
-அனலேந்தி
என் நிழல்பட்டு
நடந்து போகும் அவன் நிழலோடு
உரசி செல்கிறது இவன் நிழலும்...
கடந்து கொள்கிற நிஜங்கள்
கைக்குலுக்காமல் தொடர்கின்றன
களர் நிலத்திலும்...
நட்பாக்கி விடும் நிழலின் மரத்தை
வீழ்த்துவதிலேயே இருக்கிறது
மனித விருப்பம்...
அபகரித்தல்
அறியாதவாறே நிகழ்த்தப் படுகிறது
கரை அரிக்கும் அலையாய் வருடி...
அடுக்ககங்களின் நிழல்கள் கூட
நீழ்வதில்லை
குடிசைகளின் திசை நோக்கி...
வளாகங்களை
வசீகரமாக விரித்துக் கொள்கின்றவர்கள்
சுவரெழுப்பிக் கொள்கின்றனர்
மனங்களை...
எழும்பும் சப்தம்
எல்லாச் செவிகளையும் தான்
தீண்டுகிறது...
பார்வைகள் கூட
பட்டுத்தான் நகர்கிறது புறத்தில்...
என்பதை மீறி
தம் நிழல் அலைகளை
தாமே எழுப்பிக் கொள்கின்றனர்
தனக்கானதாக இருக்கும்படி...
ஒரு நாளில்
அவரவர் நிழல்களே
அவரவர்களை விழுங்கி விடுவதிலிருந்து
தப்பிக்க முடியாமல் நிஜங்களாகி விடும்
நிழல்களோடு நிஜங்கள்...
-கா.அமீர்ஜான்
உன்
இருமலின் அர்த்தம்
புரிந்து
குழந்தைகளின்
உறக்கம் கலையாமல்
உன் அறையில்
விடியும் வரை நான்.
சில நாட்களாய்
அந்த இருமலை எதிர்பார்த்து
நான் உறங்குவதே இல்லை.
விடியும் வரையும்
நீ இருமுவதே இல்லை
அப்படிதான்
என்ன வயதாகி விட்டதோ
உனக்கு.
-லசி
எந்த உறவும் இல்லாமல்
நடிப்பும் இல்லாமல்
அன்புக்காக
ஏங்கும் நீ
அனாதை என்று
அழைக்கப்படுகிறாய்!
எல்லா உறவுகளுடனும்
அன்பு இல்லாமல்
நடித்தால் மட்டுமே போதும்
என்று வாழ
பழகிக் கொண்ட நான் -
என்னவென்று அழைக்கப் படுவேன்!
-சுகந்தா


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக