செவ்வாய், 23 ஜூன், 2009

2009-06-23

Fantastic Railway Pictures - Amazing Photos


Fantastic Railway Pictures - Amazing Photos


பள்ளிக்கட்டண வசூலைத் தடுக்க புதிய சட்டம்: அமைச்சர் தகவல்

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர முதல்-அமைச்சர் அனுமதி வழங்கி இருக்கிறார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் இன்று தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து விவாதிக்க வேண்டும் என்று அனைத்து கட்சி உறுப்பினர்களும் கோரிக்கை எழுப்பினார்கள். இதற்கு சபாநாயகர் அனுமதி அளித்தார்.

அப்போது நடந்த  விவாதம் வருமாறு:

எஸ்.வி. சேகர் (அ.தி.மு.க.):- தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்தால் தான் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் என்ற ஒரு மாயை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தற்போது அரசு பள்ளிகளிலும், மாநகராட்சி பள்ளிகளிலும் படிக்கும் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் எடுக்கிறார்கள். கல்வி வியாபாரம் ஆகாமல் தடுக்க சமச்சீர் கல்வி முறையை கொண்டு வர வேண்டும்.

ஜூன் மாதம் வந்தாலே தற்கொலை செய்து கொள்ளலாமா என்று பெற்றோர்கள் யோசிக்கும் அளவுக்கு தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணத்தால் அடித்தள, நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே பள்ளிகளுக்கு அரசே கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். கல்வியை சேவையாக செய்யவேண்டும்.

ஞானசேகரன் (காங்கிரஸ்):- தனியார் பள்ளிகளில் மட்டுமல்லாமல் அரசு பள்ளிகளிலும் பெற்றோர்- ஆசிரியர் கழகம் மூலம் அதிக பணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் காமராஜரின் கனவு வீணாகிறது. கூடுதல் வசூலை தடுக்க மாவட்டங்களில் கட்டண நிர்ணய குழு அமைக்க வேண்டும்.

ஜி.கே. மணி (பா.ம.க.):- தனியார் பள்ளிகளில் தான் நன்றாக படிக்க முடியும் என்ற மாயையால் சென்னை நகரில் கூட 30 அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பல அரசு பள்ளிகளில் மாணவர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் ஆசிரியர்கள் குறைவாக உள்ளனர். அரசு பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பலருக்கு எழுத, படிக்க தெரியவில்லை. மற்ற மாநிலங்களில் மெட்ரிக்குலேசன் பாடத்திட்டம் கிடையாது. எல்லா பள்ளிகளிலும் அரசே கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

மகேந்திரன் (மா. கம்யூ.,):- ஆண்டு தோறும் குடும்ப வருமானத்தில் 30 சதவீதம் குழந்தைகளின் கல்விக்காகவே செலவழிக்க வேண்டியுள்ளது. எல்.கே.ஜி. படிப்புக்கு கூட பல ஆயிரக்கணக்கில் செலவழிக்க வேண்டியுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

சிவபுண்ணியம் (இ.கம்யூ.,):- கட்டாய நன்கொடை பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. அரசு பள்ளிகளில் கல்வி தரம் குறைவாக இருக்கிறது என்ற கருத்து இருப்பதால் தான் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள். இதனால் அவர்கள் கட்டணத்தை உயர்த்துகிறார்கள். சில தனியார் பள்ளிகள் 10-ம் வகுப்பில் தேர்வான மாணவர்களை தங்களது பள்ளிகளிலேயே 11-ம் வகுப்பில் சேர்ப்பது இல்லை. 100 சதவீத தேர்ச்சியை காட்டி கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்காக இதை செய்கிறார்கள். எனவே அரசு பள்ளிகளில் தரமான கல்வி இருக்கிறது என்ற நம்பிக்கையை வளர்க்க வேண்டும்.

அமைச்சர் தங்கம் தென்னரசு:- பல்வேறு தனியார், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக உறுப்பினர்கள் இங்கு குறிப்பிட்டனர். தமிழ்நாட்டில் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும். சுமையில்லாத கல்வியாக அது இருக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கல்வித்துறையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இதற்காக தான் தேர்வு கட்டணம் ரத்து, சத்துணவில் 3 மூட்டை, இலவச சீருடை, புத்தகம், பஸ் பாஸ், சைக்கிள், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு கல்வி கட்டணத்தில் இருந்து முழுமையான விலக்கு போன்ற பல்வேறு சலுகைகளை அவர் வழங்கி உள்ளார்.

இந்த நிலையில் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் என்ற பிரச்னை வரும்போது அதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். கட்டண விகிதம் பல்வேறு பள்ளிகளில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. வரம்பு மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க அரசு முன் வந்துள்ளது.

இந்த சூழ்நிலையிலும் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் நன்றாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் உள்ள அரசு பள்ளி மாணவி மாநில அளவில் 3-ம் இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சிறப்பான கல்வி வழங்கப்படுவதாகவும், கல்வி வளர்ச்சியில் 3-வது இடத்தில் இருப்பதாகவும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தமிழகத்தின் செயல் வழி கல்வி திட்டத்துக்கு பிரதமரின் விருது கிடைத்துள்ளது.

தனியார் பள்ளிகளில் கட்டணத்தை சீரமைக்க கடந்த ஆட்சியில் சிட்டிபாபு குழு அமைக்கப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் 11 நீதிபதிகள் கொண்ட குழு சுயநிதி பள்ளிகள் அவர்கள் விருப்பப்படி கட்டணம் வசூலிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியதால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காகவே இது வசூலிக்கப்படுகிறது என்றும் உறுப்பினர்கள் குறிப்பிட்டார்கள். தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 ஆயிரம் ஆசிரியர்கள் வீதம் காலி பணியிடங்களை நிரப்பி வருகிறது. இந்த ஆண்டும் பணியிடங்களை நிரப்ப முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் குறிப்பிட்ட அளவு தான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறோம். இதற்காக மாவட்ட குழு முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை அதிக கட்டணம் வசூலித்ததாக 116 பள்ளிகள் மீது புகார்கள் வந்துள்ளன. இதில் 69 பள்ளிகள் மெட்ரிக் பள்ளிகள். புகார் கூறப்பட்ட பள்ளிகளிடம் விளக்கம் கேட்டுள்ளோம். தவறு செயதது உறுதியானால் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்ணயிக்க மாநில அளவில் குழு அமைக்க முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சட்டசபை கூட்டத்தொடரிலேயே கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வர முதல்-அமைச்சர் அனுமதி வழங்கி இருக்கிறார்.

இதன்படி தனியார் பள்ளிகளுக்கும் கட்டணத்தை அதற்கான குழு நிர்ணயிக்கும் இதை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு பள்ளிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்யும் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்காது.

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

Elephant - Terminator


Elephant - Terminator


கருத்துகள் இல்லை: