புதன், 24 ஜூன், 2009

2009-06-24

கியூபா… ஒரு ரகசிய பூமி. இங்கிருந்து புறப்பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ என்ற புயலை மட்டுமே யாவரும் அறிவர். அவருடைய புரட்சியும், 50 வருட தொடர்ச்சியான ஆட்சியும் ஓரளவுக்குத் தெரியும். அமெரிக்காவின் அருகில் இருந்து கொண்டு கம்யூனிஸம் பேசும் நாடு. அதனாலேயே அதற்கு பகையாகிப்போன நாடு.
கம்யூனிஸம் பேசிக்கொண்டு ஃபிடல் காஸ்ட்ரோ குடும்பம் நடத்தும் சொகுசான வாழ்க்கை பற்றி தோலுரிக்கும் வண்ணம் செயல்பட்டிருக்கிறார் அமெரிக்காவில் வசிக்கும் கியூபாகாரர் ஒருவர்.
மியாமியில் வசிக்கும் லூயிஸ் டோமிங்குஷ்தான் அவர். இவர் என்ன காரியம் செய்தார் தெரியுமா?
பிடல் காஸ்ட்ரோவின் மகனான ஆண்டனியோ காஸ்ட்ரோ சோடோ டெல் வாலி - ன் (அம்மா பேரையும் சேர்த்து) நிஜ முகத்தை உலகிற்குக் காட்ட விரும்பினார்.
பிடல் காஸ்ட்ரோ குடும்பத்தினரின் சொகுசு வாழ்க்கை குறி்த்து ஏற்கனவே குற்றச்சாட்டுகள் உண்டு. ஆண்டனியோ காஸ்ட்ரோவும் பெண்கள் விஷயத்தில் பலவீனமானவர் என்கிற ரீதியில் சில சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்து அடங்கும்.
பிடல் காஸ்ட்ரோவின் இரண்டாவது மனைவியான டாலியா சோடோ டெல் வாலிக்கு பிறந்த ஐந்து மகன்களில் ஆண்டனியோ காஸ்ட்ரோ ஒருவர். ஆண்டனியோ ஒரு எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர். கியூபா பேஸ்பால் அணிக்கான மருத்துவராக இருக்கிறார். விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு உடல் நலம் தொடர்பான உதவிகளை செய்து வருபவர்.
இவருடைய சொகுசு வாழ்க்கை மற்றும் பெண்கள் மீதான ஈடுபாடு குறித்து உலகிற்கு எடுத்துச் சொல்ல விரும்பிய டோமிங் குஷ், க்ளாடியா () என்கிற 27 வயது விளையாட்டுலக பெண் பத்திரிகையாளரை கற்பனையாக உருவாக்கினார்.
இணையதளம் மூலம் ஆண்டனியோ காஸ்ட்ரோவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். ஆண்டனியோ தான் க்ளாடியா என்ற கொலம்பியா பெண்ணோடுதான் பேசிக்கொண்டிருப்பதாக எண்ணி, நிறைய விஷயங்களை மனம் திறந்து பேசியிருக்கிறார். நன்றாக 'ஜொள்ளி'யிருக்கிறார். இணையதளத்தில், இருவருக்கிடையேயான இந்த சாட்டிங் சுமார் எட்டு மாதம் நீடித்திருக்கிறது.
கற்பனை பாத்திரமான க்ளாடியாவிடம் ஆண்டனியோ தன்னுடைய தினசரி வாழ்க்கை மற்றும் தற்போதைய கியூபா அதிபரும் சித்தப்பாவுமான ராவுல் காஸ்ட்ரோ உடன் நடத்தும் உலகப் பயணங்கள் குறித்தெல்லாம் 'சாட்'டில் போட்டுத் தள்ளி இருக்கிறார்.
தற்போது டோமிங்குஷ் எல்லா விஷயங்களையும் தன்னுடைய வலைத்தளத்தில் போட்டு உடைத்துவிட்டார். க்ளாடியா என்கிற கற்பனைப் பெண்ணாக தானும் ஆண்டணியோவும் பேசிய விவரங்களையும் (ஸ்பானிஷ் மொழியில்), ஆண்டனியோ அனுப்பிவைத்த அவருடைய படங்கள் என, வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி விட்டார்.
'பாருங்கள்… ஏழைகளுக்காக வாழ்வதாகச் சொல்லிக் கொள்ளும் கியூபா நாட்டு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த வாரிசின் லட்சணத்தை!' என்று புட்டுபுட்டு வைத்திருக்கிறார்.
நல்லவேளை, ஆண்டனியோ ஜொள்ளு தான் அதிகம் விட்டிருக்கிறாரே தவிர, கியூபா அரசின் ரகசியங்கள் எதையும் சொல்லவில்லை என்று மீசையில் மண் ஒட்டாதக் கதையாக ஆறுதல்பட்டுக்கொள்கிறதாம் காஸ்ட்ரோ குடும்பம்.
'அது எப்படி ஆண் ஒருவர் பெண்போல பேசி ஏமாற்றலாம்' என்று டோமிங் குஷ் மேல் பாய்கிறார்கள் சிலர். மன்னிப்பு கேட்காவிட்டால்… என்கிற ரீதியில் எச்சரிக்கையும் அவருக்கு விடப்பட்டிருக்கிறது.
ஆனால் இதற்கெல்லாம் டோமிங்குஷ் அசருவதாகத் தெரியவில்லை.
'மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது' என்பவர், 'கியூபா நாட்டு மக்கள் வெட்டவெளியில் திரியும் கைதிகளைப் போலத்தான வாழ்ந்து வருகிறார்கள்' என்பது இவருடைய ஆதங்கம். அவர்களுடைய உரிமைகள் எல்லாம் பறிக்கப்படுகின்றன. காரணமில்லாமல் எத்தனையோ அப்பாவிகள் கியூபா நாட்டுச் சிறைகளில் கொடுமைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார். இதற்கெல்லாம் எப்போது விடியல் என்றும் கேட்கிறார்.
'பக்கத்து நாடுகளுடன் பாசமாக இருப்போம்' என்று ஒபாமா கூறிய நேரமோ என்னவோ, திரும்பவும் கியூபாவுடன் முட்டல் நேர்ந்திருக்கிறது.
இதுதான் தற்போதைய கியூபா - அமெரிக்கா பரபரப்பு!

மிரட்டல்களில் பல வகை. அதில், இது புதுவகை. ஆஸ்கார் விருது பெற்ற படமான ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த நடிகர் அஜீத் பாண்டே நடிக்க வாய்ப்பு கேட்டு தயாரி்ப்பாளர் ராமானந்த் சாகரை தொலைபேசியில் மிரட்டியதாக கைது செய்யப்பட்டார்.

பிரபல சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர் ராமானந்த் சாகர். இவருடைய நிறுவனத்துக்கு கடந்த மே மாதம் ஒரு அனாமத்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர் தன்னை ஹூஸ்ரி என்று கூறிக்கொண்டார். பிரபல தாதாவான ஷோட்டா சகிலின் நண்பர் என்றும், உங்கள் நிறுவனம் எடுக்கும் சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் நடித்த அஜீத் பாண்டேவுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று கேட்டிருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் தனக்கு ரூ.20 லட்சம் பணம் தர வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கொலையும் செய்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

மும்பை காவல்துறையின் விசாரணையில் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்தது நடிகர் அஜீத் பாண்டே தான் என்பது தெரியவந்தது.
இது குறித்து காவல்துறை துணை ஆணையர் ராகேஷ் மரியா கூறுகையில்,
"கடந்த மே 24ஆம் தேதி அஜீத் பாண்டே போன் செய்து இவ்வாறு மிரட்டியிருக்கிறார். தன்னை ஹூஸ்ரி என்றும் கூறியிருக்கிறார்" என்றார்.
அஜீத் பாண்டேவை அவர் பயன்படுத்திய செல்போனின் சிம்கார்டு காட்டிக் கொடுத்துவிட்டது. கைது செய்யப்பட்ட அவர், உள்ளூர் நீதிமன்றத்தால் ஜூன் 27 வரை காவல்துறை விசாரணையில் வைக்கப்பட்டுள்ளார்.



More than a Blog Aggregator

by கோ.கண்ணன்


More than a Blog Aggregator

by சித்தன்
A

கருத்துகள் இல்லை: