திங்கள், 29 ஜூன், 2009

2009-06-29

இலங்கைக்குச் சென்று வந்தஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஜி அவர்களின் சிடியில் அப்படி என்னதான் இருக்கிறது. அதைப் பார்த்த அடுத்த நாளே ஜெயலலிதா தீவிர ஈழ ஆதரவாளராக மாறிவிட்டார். அதைப் பார்த்து ஈழ ஆதரவாளர்கள் பலரும் ஜெயலலிதா ஆதரவாளராக மாறிவிட்டார்கள்.

தற்போது விடுதலைப் புலிகளே ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை அணுகியுள்ளார்கள் என்று செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை அரசுக்கு அவருக்கிருக்கும் நல்லெண்ண உறவுகளைப் பயன்படுத்தி, ஈழப்போரை நிறுத்த உதவுமாறு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் திரு.நடேசன் தொலைபேசியில் கேட்டுக்கொண்டதாக ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் ஆசிரமத்திலிருந்து ஒரு செய்தி வெளியாகியுள்ளதாக இந்திய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச்செய்தி உண்மையா பொய்யா என இதுவரை புலிகள் தரப்பிலிருந்து எதுவும் சொல்லப்படவில்லை.

நாங்கள் போர் நிறுத்தத்துக்கு தயாராகவே உள்ளோம். போர் நிறுத்தத்தை நடை முறைப்படுத் தேவையான அனுசரணைப் பணியை மேற்கொள்ளுமாறு தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் நடேசன் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியிடம் தெரிவித்துள்ளாராம்.

ஆனால் போர் நிறுத்தம் என்றால் என்ன?
புலிகள் ஆதரவாளர்களைப் பொறுத்தவரையில், தற்போது பிரபாகரன் தப்பி, பின்னர் பலம் திரட்டி மீண்டும் போரிடுவது.
இலங்கையைப் பொறுத்தவரையில், தமிழர்களை கொன்று குவித்து, உடனே பிரபாகரனை பிடித்து, மீண்டும் புலிகள் பலம் பெறுவதை தடுப்பது.

பிரபாகரன் தப்பிவிட்டால் புலிகள் மட்டுமல்லாமல் ஈழ ஆதரவாளர்கள் அனைவருமே மீண்டும் புத்துணர்வு பெறுவார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால் பிரபாகரன் தப்பிவிட்டார் எனத் தெரிந்தால், அடுத்த கணமே இங்கிருக்கும் ஜெயலலிதா உட்பட அனைவரும் தங்கள் அரசியல் நிலையை மாற்றிக் கொள்வார்கள்.  ஜெ.பிரிவு ஈழ ஆதரவாளர்கள்தான் தர்மசங்கடப்படுவார்கள்.

இந்திராகாந்தி பாணியில் போரிட்டு, இலங்கையை பணிய வைத்து, தனி ஈழம் அமைப்பேன் என்று ஜெ மேடையில் முழங்கினாலும், இது வரையில் புலிகள் பற்றியும், புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றியும் தனது கருத்து என்ன என்பதைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. நான் புரிந்து கொண்ட வரையில் புலிகள் மேல் அவருக்கு இன்னமும் அபிமானம் வரவில்லை. இனியும் வரப்போவதில்லை. அதனால் அவர் தனி ஈழம் என்று கூறினாலும் தனி ஈழத்தின் தலைவராக பிரபாகரனை ஜெயலலிதா ஏற்றுக்கொள்ள மாட்டார். ஆனால் தீவிர ஈழ ஆதரவாளர்களோ தனி ஈழம் என்றால் அது பிரபாகரன் தலையில்தான் அமையும் என்று போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் என்ன விசித்திரம் பாருங்கள். கருணாநிதியின் இன்றைய அரசியல் நிலையால் பிரபாகரனை ஏற்காத ஜெயலலிதாவும், பிரபாகரனைத் தவிர வேறு எவரையும் ஏற்கத் தயாராக இல்லாதவர்களும் ஓரணியில் இருப்பதைப் போலத் தோன்றுகிறது.

அதாவது ஈழ ஆதரவு என்பது பின்னுக்குப் போய், கருணாநிதி எதிர்ப்பு என்கிற ஒரு கோட்டில் அவர்கள் ஒன்றாகப் பயணிக்கிறார்கள். அதற்கு மிக முக்கிய காரணம் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அவர்களின் சி.டி. அந்த சி.டியில் அப்படி என்னதான் இருக்கிறது?
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, அவருடைய கடைசி காலத்தில் அமெரிக்க புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டார். அப்போது அதனை அருவருக்கத்தக்க வகையில், கடுமையாக கேலி செய்து தி.மு.க ஆதரவு செய்தித்தாளில் கிண்டல் செய்திகளும், கிண்டல் போட்டோக்களும் வெளிவந்தன.  அந்த கேலிகளையும் கிண்டல்களையும் கருணாநிதி அனுமதித்தார்.

காலச் சக்கரம் உருண்டோடிவிட்டது. இன்று கருணாநிதி சக்கர நாற்காலிகளில் அமர்ந்து கொண்டும், மருத்துவமனைகளில் இருந்து கொண்டும் அரசை நடத்தும் நிலைக்கு அவரை முதுமை வாட்டி எடுக்கிறது.

அன்று கருணாநிதி எம்.ஜி.ஆரின் உடல் நிலையை கேலி செய்தது போல, இன்று ஜெயலலிதா மேடை போட்டு கருணாநிதியின் உடல் நிலையை கேலி செய்கிறார். நாடகம் என்று கிண்டல் செய்கிறார். என்னை சந்திக்க பயந்து கொண்டு மருத்துவமனையில் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று ஜோக் அடிக்கிறார்.

காலச் சக்கரம் யாருக்காகவும் நிற்பதில்லை!
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!
நேற்று ஐதராபாத்தில் பயிற்சி முடித்துவிட்டு கோவை மாவட்டம் மதுக்கரை ராணுவ முகாமைச் சேர்ந்த வீரர்கள் முகாமிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்களாம். அதைப் பார்த்த சில அதிரடி ஈழ ஆதரவாளர்கள், இந்திய இராணுவம் இரகசியமாக இலங்கைக்கு ஆயுதம் எடுத்துச் செல்வதாக நினைத்து வீரர்கள் வந்த லாரிகளை வழிமறித்து அவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். முதலில் பயந்து ஓடிய இராணுவ வீரர்கள் துணைக்கு அவர்களது தோழர்கள் வந்தவுடன் உருட்டுக் கட்டைகளால் திருப்பித் தாக்கியிருக்கின்றனர். வேடிக்கைப் பார்த்த பொது மக்கள் உட்பட, தடுக்க வந்த போலீஸ்காரர்களுக்கும், செய்தி சேகரித்த பத்திரிகையாளர்களுக்கும் இந்தத் தாக்குதலில் அடி விழுந்திருக்கிறது.

இது விரும்பத்தகாத சம்பவம். உலகப் பொருளாதாரச் சரிவால் ஏற்கனவே திடீரென வேலை வாய்ப்புகளை இழந்துள்ள இந்திய இளைஞர்கள், இது போன்ற சமயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உங்களது விரக்தியான நிலையை பயன்படுத்திக் கொண்டு சமூக விரோதிகள், ஈழப் பிரச்சனை, பாபர் மசூதி இடிப்பு, கோத்ரா இரயில் எரிப்பு போன்ற உணர்ச்சிகரமான விவகாரங்களில் உங்களை பலியாடாக்க முயல்வார்கள். உங்கள் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள். ஏற்கனவே தீக்குளிப்புகள் பரவிக் கொண்டிருக்கின்றன. சில குடும்பங்கள் அமைதியை இழந்து விட்டன. இப்போது நமது இந்திய இராணுவத்தினரையே அதுவும் இந்திய எல்லைக்குள்ளேயே, தாக்குவதென்பது பக்குவமற்ற முட்டாள்தனமான ரௌடித்தனமான செயல்.

இது தேர்தல் நேரம். இந்த நேரத்தில் ஆளாளுக்கு ஒரு கருத்து இருக்கும். ஏன் நமது வீட்டுக்குள்ளேயே, ஒரு குறிப்பிட்ட அரசியல் விவகாரத்தில் அப்பாவுக்கு ஒரு கருத்தும், அம்மாவுக்கு ஒரு கருத்தும், மகனுக்கு ஒரு கருத்தும் இருக்கும். அப்படி இருக்கிறது என்பதற்க்காக ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அது போன்ற ஒரு கேவலமான அவலமான நிலைதான், நாமே நமது இராணுவத்தை தாக்குவதாலும் ஏற்படும்.

அதனால் மீண்டும் அறிவுறுத்துகிறேன். நீங்கள் எந்தக் கழகத்தை ஆதரித்தாலும் பரவாயில்லை. எந்தக் கழகத்தை எதிர்த்தாலும் பரவாயில்லை. ஆனால் இந்தியாவையே எதிர்க்கிறேன். இந்திய இராணுவத்தையே எதிர்க்கிறேன் என்று நமது நாட்டுக்குள்ளேயே கலகம் பண்ணாதீர்கள். நஷ்டம் உங்களுக்குத்தான். உங்களைத் தூண்டிவிடுபவர்களுக்கல்ல.

உங்களைத் தூண்டிவிடுபவர்கள் அனைத்தையும் பணத்தால் அளப்பவர்கள். நீங்கள் தீக்குளித்தால் உங்கள் குடும்பத்துக்கு பத்து இலட்சம் கொடுத்துவிட்டு, அதனால் பத்து ஓட்டு கிடைக்குமா என்று கணக்குப் போடுபவர்கள்.
உங்களை இந்திய இராணுவத்துக்கு எதிராகத் தூண்டிவிட்டு, மோதவிட்டு அதை உணர்ச்சிகரமான செய்தியாக்கி, அந்தச் செய்தியை ஓட்டுகளாக்கி நாளைக்கு பதவிக்கு வந்ததும், நீங்கள் எதிர்க்கின்ற இதே இந்திய இராணுவத்தை காவலுக்கு வைத்துக் கொண்டு நாடாளத் துடிப்பவர்கள்.

நீங்கள் இப்படிச் செய்வதால் இலங்கைப் பிரச்சனை மட்டுமல்ல, எந்தப் பிரச்சனையும் தீரப்போவதில்லை. உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் அறிவுடன் நிதானமாக சிந்தியுங்கள்!
சில வருடங்களுக்கு முன், மக்களுக்கு விளங்காத ஒரு மர்மப்பிரச்சனையில் சங்கராச்சாரியாரை கைது செய்து சிறையிலடைத்தார் ஜெயலலிதா. பொம்பளை நரேந்திர மோடி என்று ஜெயலலிதாவை ஹிந்துத்துவா ஆதரவாளர்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையும் கூட. பாபர் மசூதியில் இராமர் கோவிலைக் கட்டாவிட்டால் வேறு எங்கே கட்டுவதாம் என்கிற அவருடைய பிரபலமான பஞ்ச் டயலாக், அவருக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் ஹிந்து தீவிரவாத முகத்தின் ஒரு பக்கம். சான்ஸ் கிடைத்தால் இவரும் நரேந்திர மோடி அளவிற்கு கோர தாண்டவம் ஆடக் கூடியவர் என்பது என் எண்ணம்.

ஆனால் அவருடைய சங்கராச்சாரியார் அரெஸ்ட், கொஞ்சம் மென்மையான ஹிந்து ஆதரவாளர்களை அசைத்துவிட்டது. உதாரணத்திற்கு எஸ்.வி.சேகரின் புலம்பல்கள். அந்தப் புலம்பல்கள் ஜெவிற்கு எதிரான வாக்குகளாக மாறுகின்ற அபாயம் வந்தபோது, அதை ஈடுகட்ட ஈழப்பிரச்சனை அவருக்கு வாய்த்துவிட்டது.

ஹிந்துத்துவா ஆதரவாளர்கள் எவரும் மனம் மாறி கருணாநிதிக்கு வாக்களிக்கப்போவதில்லை.
அதே போல தனி ஈழ ஆதரவாளர்கள் அனைவரும் மனம் மாறி ஜெவிற்கு வாக்களிக்கப்போவதில்லை (உதாரணத்திற்கு கருணாநிதியை சூழ்நிலைக் கைதி என்று வர்ணித்துவிட்டு காங்கிரஸை மட்டும் எதிர்க்கக் கிளம்பியிருக்கும் தமிழ்திரையுலகம்).

ஆனாலும் அங்கே சங்கராச்சாரியார் அரெஸ்டால் சிதறிய வாக்குகளை, இங்கே ஈழ ஆதரவாளர்களின் கருணாநிதி எதிர்ப்பு வாக்குகளை வைத்து சரி கட்டிக் கொள்ளலாம் என்று ஜெ கணக்கு போட்டிருக்கிறார்.

அவர் கணக்கு தவறாமலிருக்க வை.கோ, இராமதாசு மற்றும் கம்யுனிஸ்டு தோழர்கள் துணை போயிருக்கிறார்கள்.
அந்தக் கணக்கு பொய்க்க வேண்டுமென்று கருணாநிதி (உண்ணாவிரதம் உட்பட) என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால், இந்தத் தேர்தல் இந்த கணக்கை மட்டுமே அடிப்படையாக வைத்து தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

தேர்தல் முடிந்தவுடன் கூட்டிக் கழித்துப் பார்த்துவிட்டு, அனைவரும், வாக்காளர்கள் உட்பட அனைவரும் ஆளுக்கொரு திசைக்கு பறந்துவிடுவார்கள்.

ஈழப்பிரச்சனையும், சங்கராச்சாரியார் மர்மமும் அப்படியேதான் இருக்கப் போகிறது.
தமிழக வாக்காளர்களைப் பொறுத்தவரையில் . . .
50 ரூபாய் பிரியாணிக்கு விலை போகிறவர்கள் ஒரு வகை
ஜெயலலிதாவின் 50 நாட்கள் ஈழ ஆதரவிற்கு விலை போகிறவர்கள் ஒரு வகை
அழகிரியின் 5000ம் ரூபாய்க்கு விலை போகிறவர்கள் ஒரு வகை
கருணாநிதியின் வீல் சேர் முதுமைக்கு விலை போகிறவர்கள் ஒரு வகை
நேரு குடும்பத்து வாரிசுகளுக்கு விலை போகிறவர்கள் ஒரு வகை
திருமாவின் தலித் முழக்கத்திற்கு  விலை போகிறவர்கள் ஒரு வகை
சிறுபான்மை ஆதரவு கோஷங்களுக்கு விலை போகிறவர்கள் ஒரு வகை


மொத்தத்தில் ஏதாவது ஒன்றிற்கு விலை போவதில் தமிழக வாக்காளர்கள் அனைவரும் ஒரே வகை.

ஆனால் தற்போது வாக்காளர்களின் பேராதரவுடன் முன்னணியில் இருப்பது . .
அழகிரியின் 5000ம் ரூபாயும்
அம்மாவின் 50 நாள் ஈழ ஆதரவும்
இரண்டுமே தேர்தல் முடிந்தவுடன் நின்று போகும்.
இன்றைக்கு திருச்சியில் தி.மு.க கூட்டணியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. முதன் முறையாக காங்கிரஸ் கட்சியின் சுதர்சனம் மேடையில் பேசியதைப் பார்த்தேன். நறுக்கென்று பேசாமல் கொஞ்சம் வழ வழா கொழ கொழாவாகத்தான் பேசினார். ஆனால் அவர் பேசிய ஒரு பாயிண்ட் எனக்குப் பிடித்திருந்தது.

"சேது சமுத்திரம் திட்டம் துவங்கிய போது அது என்னால்தான் நடந்தது என்றார் வை.கோ. எங்களால்தான் நடந்தது என்றார்கள் கம்யுனிஸ்டு தோழர்கள். ஆனால் அவர்களை அருகில் வைத்துக் கொண்டே சேது சமுத்திர திட்டத்தை நிறுத்துவோம் என்பதை வலியுறுத்தி ஜெயலலிதா தேர்தல் அறிக்கை வெளியிட்டபோது அதை எதிர்த்துப் பேச முடியாமல் பெட்டைகளாகவும், பேடிகளாகவும் அவர்கள் அமர்ந்திருந்தார்கள்" என்றார்.

உண்மைதான்! நான் ஒரு காலத்தில் மிகவும் மதித்த வை.கோ.வும், இந்த தேர்தலுக்கு முன்பு வரை என்னை வசீகரித்த கம்யுனிஸ்டுகளும் ஜெயலலிதாவின் முன் பேடிகளாகவும் பெட்டைகளாகவும்தான் அமர்ந்திருந்தார்கள்.

கருத்துகள் இல்லை: