புதுவை முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் அம்மனின் தங்க மாங்கல்யம் திருடப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.புதுவை முதலியார்பேட்டையில் அமைந்துள்ள வன்னிய பெருமாள் கோவில் பிரசித்திபெற்றது என்பதால் அங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்குள்ள அம்மன் சன்னதியில் அம்மனுக்கு பக்தர் ஒருவர் காணிக்கையாக கொடுத்த இரண்டு பவுன் தங்க மாங்கல்யம் அணிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை சென்ற சென்ற பக்தர்கள் அம்மனின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்க மாங்கல்யத்தை காணாமல் திடுக்கிட்டனர். இதனை தொடர்ந்து கோவிலின் தனி அதிகாரி சீனிவாசன், கருவறையில் உள்ள அம்மனின் தங்க மாங்கல்யம் திருடப்பட்டது குறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பூசாரிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவிலின் கருவறைக்குள் பக்தர்கள் செல்ல அனுமதியில்லை என்ற நிலையில் அம்மனின் தங்க மாங்கல்யம் காணாமல் போனது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இருப்பினும் முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில் அம்மனின் தங்க மாங்கல்யம் திருடப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுவையில் ஹெல்மெட் மோசடியில் சிக்கி சிபிஐயால் விசாரணை நடத்தப்பட்ட எஸ்பி ராமச்சந்திரனுக்கு கட்டாய விடுமுறை அளித்து டிஜிபி வர்மா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.புதுவை காவல் துறையில் பணியாற்றும் போலீசாருக்கு ஹெல்மெட் வாங்கியதில் மோசடி நடந்துள்ளதாக சிபிஐ போலீசார் கடந்த வாரம் எஸ்பி ராமச்சந்திரன் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதேப்போல் காவல் துறை பண்டக சாலையில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்தியது.
இந்நிலையில் சிபிஐ விசாரணையில் சிக்கிய எஸ்பி ராமச்சந்திரன் மீது டிஜிபி வர்மா நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளார். இதன் முதல்கட்டமாக அவருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அவர் நேற்று முதல் நீண்ட விடுப்பில் சென்றுள்ளார். இது மட்டுமின்றி ஹெல்மெல்ட் மோசடி குறித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யும்படியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த மோசடியில் சம்பந்தபட்ட இரு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிகிறது. காவல் துறை பண்டக சாலையில் பல ஆண்டுகளாக பணியாற்றி தற்போது சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பெற்றவர் சமீபத்தில் வருவாய்க்கு அதிகமாக வில்லியனூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சொத்துக்கள் வாங்கியது குறித்து விசாரணை நடத்த உயரதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
புதுவை நகரமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கினை வாபஸ் பெற வலியுறுத்தி நடைபெற்ற வாக்குவாதம் காரணமாக நகரமன்ற கூட்டத்தில் இன்று காலை அமளி ஏற்பட்டது. மேலும் பல்வேறு பிரச்னைகளை சுட்டிக்காட்டி நகரமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுவை நகரமன்ற கூட்டம் இன்று காலை சேர்மன் டாக்டர். ஸ்ரீதேவி தலைமையில் துவங்கியதும், காங்கிரஸ் நகரமன்ற உறுப்பினர்களின் தலைவர் கோவிந்தராஜ், நகராட்சியில் உள்ள கமிட்டிகளை கலைக்க பரிந்துரை செய்துவிட்டு புதிதாக பணியாளர்களை எப்படி நியமிக்க முடியுமென்று கேள்வி எழுப்பினார். மேலும், நகரமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கினை வாபஸ் பெற வேண்டுமென்றார்.
இதே கருத்தினை இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராஜலட்சுமி, புமுகா உறுப்பினர்கள் குமரன், டேனியல், செல்வகணபதி, சுயேட்சை உறுப்பினர் செல்வகணபதி ஆகியோர் வலியுறுத்தினர். இதன்பின்னர் அவர்கள் நகரமன்ற தலைவி ஸ்ரீதேவியின் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராஜலட்சுமி, நகரமன்ற தலைவியின் செயல்பாட்டினை கண்டித்து வெளிநடப்பு செய்தார்.
இதனை தொடர்ந்து பேசிய நகரமன்ற தலைவி ஸ்ரீதேவி, பதவி உயர்வு கேட்டு ஊழியர்கள் போராட்டம் நடத்தியதன் விளைவாக காலி இடங்களுக்கு ஆட்களை நியமித்தோம் என்று விளக்கம் அளித்தார். இதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது.
அப்போது அதிமுக உறுப்பினர் பாஸ்கர், ஒருசில உறுப்பினர்கள் மட்டும் இப்படி பேசிக் கொண்டிருந்தால் நாங்கள் எப்போது பேசுவது என்று கேள்வி எழுப்பி வெளிநடப்பு செய்தார். அவரை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் குமாரி, கிருஷ்ணமூர்த்தி, சத்தியராஜ் ஆகியோரும் அவையில் இருந்து வெளியேறினர்.
நகரமன்ற தலைவி ஸ்ரீதேவியை உறுப்பினர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டநேரத்தில் அவருக்கு ஆதரவாக திமுக உறுப்பினர்கள் எவரும் பேச முன்வரவில்லை. சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற அமளிக்கு பின்னர் நகரமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கினை வாபஸ் பெற அரசுக்கு பரிந்துரை செய்வது, நகராட்சி ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும், புதுவை நகராட்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பது உட்பட 69 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக